தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகாரில் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படும் தமிழக நடிகை கஸ்தூரியை தனிப்படை பொலிஸார் நேற்று 2ஆவது நாளாகவும் தேடினார்கள்.
பிராமணர் சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பேசுவதைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் 3000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அங்கு கஸ்தூரி பேசுகையில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கொச்சையாகவும் அவதூறாகவும் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் விளக்கம் அளித்தார். எனினும் அவர் மீதான விமர்சனங்கள் நின்றபாடில்லை.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச் செயலாளர் நந்தகோபால் எழும்பூர் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் பொலிஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்காக நடிகை கஸ்தூரிக்கு அழைப்பாணை அளிக்க அவருடைய இல்லத்திற்கு சென்றனர்.
ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிப்படை பொலிஸார் கஸ்தூரியை தேடி வருகிறார்கள்.