Sunday, November 24, 2024
Home » ஆராய்ச்சிகளுக்கு உதவும் நிலையங்களாக பல்கலைக்கழக நூலகங்கள் மாற வேண்டும்

ஆராய்ச்சிகளுக்கு உதவும் நிலையங்களாக பல்கலைக்கழக நூலகங்கள் மாற வேண்டும்

by Gayan Abeykoon
November 12, 2024 1:30 am 0 comment

ல்கலைக்கழக நூலகர் சங்கத்தின் 2023/24 ஆண்டுக்கான தலைவர் கலாநிதி முகம்மது மஜீத் மஸ்றூபா தலைமையில் இலங்கை பல்கலைக்கழக நூலகர் சங்கம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் அதன் 14 ஆவது சர்வதேச மாநாட்டை நடத்தியது.

‘நூலக சேவைகளை மாற்றும் செயற்கை நுண்ணறிவு: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு, நூலக சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை ஆராய்ந்ததுடன், தொழில்நுட்ப மாற்றத்தால் உருவாகும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை விளக்குகிறது.

இம்மாநாட்டில் பிரதம விருந்தினராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து சிறப்பித்தார்.

பிரதமர் தனதுரையில், “இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை விவாதிக்க நான் உங்களிடம் உரையாடவில்லை, ஆனால் இன்​ைறய நிகழ்வில் ஒரு முக்கிய விடயத்தை கூறவே வந்துள்ளேன். நான் உங்களுடன் ஒரு கனவைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஊவா மாகாணத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருக்கும் ஒரு மாணவர், கொழும்பில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் பெறும் தரமான தகவல்கள் போன்று தகவலகள் பெறுவதை கற்பனை செய்யுங்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வரலாற்றாசிரியர் கண்டியில் பாதுகாக்கப்பட்ட அபூர்வமான சுவடிகளை உடனடியாகப் பயன்படுத்துவதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் பல்கலைக்கழகங்களின் டிஜிட்டல் தொகுப்புகள் உலகளாவிய தகவல், அறிவு வலைப்பின்னல்களுடன் தடையின்றி தொடர்புகொள்வதை கற்பனை செய்யுங்கள். இது வெறும் கனவு அல்ல. நாமெல்லாம் ஒன்றிணைந்து கட்டமைக்க வேண்டிய எதிர்காலம் இது. நம் பல்கலைக்கழக நூலகங்கள் பாரம்பரிய தகவல் சேமிப்புப் புள்ளிகளாக இருந்துவிடாமல், புதுமைகளின் மையங்களாகவும் ஆராய்ச்சிகளுக்கு உதவும் மையங்களாகவும் மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“நீங்கள் அறிவின் பாதுகாவலர்களாக மட்டுமல்ல, வாசககர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஊக்கமளிப்பவர்களாகவம் டிஜிட்டல் பிளவு காரணமாக ஏற்பட்டிருக்கும் இடைவெளிகளை இணைக்கும் பாலங்களாகவும் செயற்பட வேண்டும். இலங்கையின் நூலகங்கள் தெற்காசியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னணியில் வரவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் உயர்கல்வி முறையை உலகத் தரத்திற்கு மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவு தசாப்தத்தில் நூலகர்கள் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரங்களை விளக்கினார்.

“பல்வேறு துறைகளில் பங்கேற்பாளர்களை உறுதியோடும் நோக்கத்தோடும் முன்னேற்றுவோம். கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான செலவுகளில் நமது தற்போதைய நிலை சவாலாக இருந்தாலும், அது நமது விதி அல்ல. புத்தாக்கம், மூலோபாய சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவின் உருமாற்றும் சக்தி ஆகியவற்றின் மூலம், உகந்த வளங்களைக் கொண்டு எவ்வாறு மேலும் சாதிப்பது என்பதை நிரூபிப்பதில் இலங்கை பல்கலைக்ககழக நூலகங்களின் வழிநடத்தல் மூலம் நாம் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா கூறினார்.

இச்சர்வதேச மாநாட்டில் பிரதமரின் உரை பங்கேற்பாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

கௌரவ விருந்தினர்களாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் துணைத் தலைவரான பேராசிரியர் வசந்த குமார, துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் குழுவின் (CVCD) தலைவரான பேராசிரியர் திருமதி G.A.S. கினிகத்தர, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் கலாநிதி யு. எல். அப்துல் மஜீத் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இம்மாநாட்டில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) துணைவேந்தர் பேராசிரியர் நுவான் கொதெகொட முதன்மையுரை ஆற்றினார். செயற்கை நுண்ணறிவினால் நடத்தப்படும் நூலக சேவைகள், செயற்கை நுண்ணறிவு கல்வியறிவு, கல்வி அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பின் நெறிமுறை தாக்கங்கள் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தவறான தகவல்களை எதிர்கொள்வதில் நூலகங்களின் பங்கு போன்ற முக்கிய கருப்பொருள்களை முன்னிலைப்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆராய்ச்சியாளர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும், மேற்படிப்புப் பயிலும் மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவு, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பட்டியல் பதிவுகளில் ஏற்பட்டுள்ள நெறிமுறை சிக்கல்கள் போன்ற தலைப்புகளில் தங்கள் ஆராய்ச்சி ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்த சிறப்பம்சமான நிகழ்ச்சி, நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையில் உள்ள உலகளாவிய நிபுணர்களையும் உள்ளூர் நிபுணர்களையும் ஒரே மேடையில் ஒன்று சேர்த்து, செயற்கை நுண்ணறிவு காலத்தில் நூலக சேவைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பாதையை வகுத்தது.

இச்சர்வதேச மாநாட்டில் (ICULA 2024) வரலாற்று நூல் பிரதமர் முன்னிலையில் வெளியிடப்பட்டதுடன், மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் பங்கேற்ற வீடியோ போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த மாநாடு, கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கும், அறிவு மற்றும் கல்வியை ஊக்குவிக்கும் தங்களது முக்கிய பங்களிப்பை நூலகங்கள் தொடர்ந்து செயல்படுத்திக் கொள்ளவும், இன்றைய டிஜிட்டல் காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், தேவையான விடயங்களை உறுதிப்படுத்திய ஓர் திறமையான அரங்கமாக அமைந்திருந்தது.

அம்பாறை மத்திய நிருபர்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT