பங்களாதேஷின் துறைமுக நகரமான சிட்டகாங்கில், கிருஷ்ணா பிரக்கைஞகளுக்கான சர்வதேச சங்கத்தை (ISKCON) விமர்சிக்கும் முகநூல் பதிவால் பதற்றமான சூழ்நிலையில் இந்து சமூகத்தினருக்கும் சட்ட அமுலாக்கப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பொலிஸார் மற்றும் ராணுவ கூட்டுப்படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
“உள்ளூர் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இஸ்கானை விமர்சித்து பேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவேற்றியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இந்து சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். பொலிசார் மீது செங்கல் மற்றும் ஏனைய பொருட்களை வீசினர். மோதல்களுக்குப் பிறகு, பொலிஸார் மற்றும் இராணுவத்தை உள்ளடக்கிய சட்ட அமுலாக்க பிரிவினரால் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று சிட்டகாங்கின் உள்ளூர் செய்தியாளர் சைபுதீன் துஹின் ANIசெய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
“உஸ்மான் என்ற உள்ளூர் இளைஞர் இஸ்கானைத் தடை செய்யக் கோரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பதற்றம் ஏற்பட்ட போது சட்டம் ஒழுங்கு படையினர் அங்கு சென்றனர். சட்ட அமுலாக்க பிரிவினர் மீது ஆசிட் வீசப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று இந்து சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இரவில், கூட்டுப் படைகள் ஹசாரி கோலி மீது சோதனை நடத்தி சுமார் 100 சந்தேக நபர்களை கைது செய்தனர். சிலர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். செயல்பாட்டின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சம்பவம் குறித்த விவரங்கள் தெரியவில்லை”.
பங்களா டெய்லி பத்திரிகை செய்தியின் பிரகாரம் , இந்த நடவடிக்கையின் போது வெற்று ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் சில தனிநபர்களும் குழுக்களும் பங்களாதேஷில் இஸ்கானை தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். டாக்காவில் உள்ள இஸ்கான் தலைவர்கள் அண்மையில் “அமர் தேஷ்” ஆசிரியர் மஹ்முதுர் ரஹ்மானிடம் இஸ்கானை தடை செய்யக் கோரியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். “இன்கிலாப் மஞ்ச்” என்ற குழு இஸ்கானை தடை செய்யக் கோரியது.
பங்களாதேஷின் 170 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 8 சதவீதமான இந்துக்கள், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை பாரம்பரியமாக ஆதரித்துள்ளனர். கடந்த மாதம் ஒதுக்கீடு எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தொடர்ந்து நாடு பின்னடைவை எதிர்கொண்டது.
மாணவர்கள் தலைமையிலான இயக்கம் பங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்தது. பல வாரங்களாக நடந்த போராட்டங்கள் மற்றும் மோதல்களுக்குப் பிறகு 600 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் ஹசீனா, ஆகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதோடு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.