– நடந்த விடயத்தை தெளிவுபடுத்தியவரை எச்சரித்து விடுவித்த நீதவான்
தெஹிவளை கௌடானவில் இருந்து அத்திட்டிய, படோவிட்டா வரையிலான கால்வாய் வழியாக ஏரிக்கு செல்லும் பகுதியில் ஒரு வகை சிவப்பு வண்ணப்பூச்சை விடுவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பிரதம வைத்திய அதிகாரி ஜயலத் குணதிலக்கவின் மேற்பார்வையில், பொதுச் சுகாதார பரிசோதகர் ஜி.எஸ். சந்தன தலைமையில் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.ஏ.டி.யு.ஜயவர்தன, சுகாதார நிர்வாகி நிஸ்ஸங்க அபோன்சு ஆகியோரால் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தெஹிவளை பிரதேசத்தில் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் இருந்து அகற்றப்பட்ட குறித்த சிவப்பு நிற பூச்சு பீப்பாவை (பெரல்) அதனை அங்கிருந்து அகற்றுமாறு, குறித்த நிறுவனத்தினால் இந்நபரிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதை அவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அவை நீரில் நனைந்து பழுதடைந்த நிலையில் அதிலிருந்த பூச்சை குறித்த நபர் பிரதான கால்வாயில் கொட்டியுள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேல் கால்வாய் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியிருந்த நிலையில், குறித்த பகுதியில் உள்ள பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோதமான முறையில் இவ்வாறு வண்ணப்பூச்சை விடுவித்து, கால்வாய் நீரை மாசுபடுத்திய நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, , மேலதிக நீதவான் திருமதி ஹேமமாலி ஹல்பாண்டினிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபரை நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்ததாக, பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.ஏ.டி.யு. ஜயவர்தன தெரிவித்தார்.