Sunday, November 24, 2024
Home » பேராயரின் அடிப்படை உரிமை மனு விசாரணை பெப். 24 இல் நடத்த முடிவு

பேராயரின் அடிப்படை உரிமை மனு விசாரணை பெப். 24 இல் நடத்த முடிவு

by Gayan Abeykoon
November 12, 2024 7:20 am 0 comment

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி விசாரணை செய்ய  உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரால் மேற்படி மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி மனு நேற்றையதினம் நீதிபதி யசந்த கோதாகொட தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின்புள்ளே, நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்ததுடன், இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதியின் சார்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் வழங்கியது.   நீதிமன்றத்தில் நேற்று தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணிகள், இது தொடர்பான அடிப்படை உரிமை மனுக்களை முழுமையாக நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஒரு குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வேறு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனரென தெரிவித்தனர்.

அதற்கமைய மனுக்களை பெப்ரவரி 24ஆம்,  25ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.  தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு முறையான பரிந்துரையை வழங்கவில்லையென மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.  முறையான பரிந்துரையின்றி அவரை பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதுடன், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுமென்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய  பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் இந்த மனு மீதான விசாரணையை கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டஉயர் நீதிமன்றம்,  பொலிஸ் மாஅதிபர் என்ற வகையில் தேசபந்து தென்னகோன் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு இடைக்கால  தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT