உலகளாவிய வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியில் G7 அமைப்பு நாடுகள் வீழ்ச்சி கண்டு வருவதாக இந்திய நிதி கமிஷன் ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினரான டி.கே. ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் உலகளாவிய வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டுக்குள் G7 அமைப்பு நாடுகளின் ஏற்றுமதியை விடவும் அதிகரித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2000 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரிக்ஸ் நாடுகளின் உலகளாவிய வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 10.7 சதவீதத்திலிருந்து 23.3 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் G7 அமைப்பு நாடுகளின் ஏற்றுமதி இக்காலப்பகுதிக்குள் 45.1 சதவீதத்தில் இருந்து 28.9 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேநேரம் உலகின் ஏனைய பிராந்திய நாடுகளின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியை எடுத்துப் பார்த்தால் அங்கு, 44.2 சதவீதத்தில் இருந்து 47.9 வீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
வளர்ந்து வரும் நாடுகளது உலகளாவிய வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து வருவதையே இந்தத் தரவுகள் வெளிபடுத்தி நிற்கின்றன. உலகளாவிய வர்த்தக இயங்கியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் சீனாவும் இந்தியாவும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.