வாழ்வதற்கு வழிகாட்டிய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், புறம்பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற தீய செயல்களைக் கண்டித்துள்ளார்கள். ஓர் உண்மை முஸ்லிம் இத்தகைய தீய பழக்கவழக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இத்தீய பழக்கத்தால் சமூகத்தில் பிரச்சினைகளும், பிளவுகளும் கூட ஏற்பட்டு விடுகின்றன. சில குடும்பங்கள் கூடப் பிரிந்து விடுகின்றன. புறம்பேசுவதை திருக்குர்ஆனில் அல்லாஹ் வன்மையாகக் கண்டித்துள்ளான்.
‘உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம்பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரன் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே? (புறம்பேசுவதும் அவ்வாறே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும், கிருபை செய்வோனாகவும் இருக்கிறான்.
(அல் குர்ஆன் 49:12)
இத்திருவசனத்தைக் காணும் உண்மை முஸ்லிமின் இதயத்தில் புறம்பேசுவதில் வெறுப்பு ஏற்பட வேண்டும். சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதில் ஏற்படுகின்ற வெறுப்பு ஏற்பட வேண்டும். புறம்பேசுதலானது மிகக் கொடிய பாவமாகும். இப்பாவத்தைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
புறம்பேசுவது விபசாரத்தை விடக் கடுமையான பாவமாகும். அப்போது மக்கள் வினவினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! புறம்பேசுவது விபசாரத்தை விடக் கடுமையான பாவமாக இருப்பது ஏன்? அப்போது அண்ணலார், மனிதன் விபசாரம் செய்கிறான். பிறகு பாவமன்னிப்புக் கோருகின்றான். அல்லாஹ் அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் புறம்பேசுபவனை அவன் எவரைப் பற்றிப் புறம்பேசினானோ அவர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்க மாட்டான்.
(ஆதாரம்: மிஷ்காத்)
எனவே உண்மை முஸ்லிம் இத்தகைய கொடிய பாவமான புறம்பேச மாட்டார். கோள் சொல்லித் திரிய மாட்டார். புறம்பேசுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதையும், குடும்பங்களுக்கிடையேயும் நண்பர்களுக்கிடையேயும் உறவைத் துண்டிப்பதையும் அறிந்து அப்பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வார்.
நாம் பேசுவது புறம் என்பதைக் கூட நம்மில் சிலர் அறியாமல் இருக்கின்றோம். ஒருமுறை புறம்பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதருமே அதிகம் அறிந்தவர்கள் என்று கூறினர். அதற்கு அண்ணலார் உன் சகோதரனைப் பற்றி அவன் வெறுக்கும் முறையில் நீ பேசுவதே புறம் பேசுவதாகும் என்று கூறினார்கள். மீண்டும் மக்கள் நபியவர்களிடம் வினவினார்கள். கூறுகின்ற அந்த விஷயம் (குறை) என் சகோதரனிடம் (உண்மையில்) காணப்பட்டாலுமா?
நபியவர்கள் விளக்கினார்கள். நீர் கூறும் விஷயம் (குறை) அவனிடம் இருந்தால் அது புறம்பேசுவதாகும். நீ கூறும் விஷயம் அவனிடம் இல்லையென்றால் அவனை நீ அவதூறாகப் பேசி விட்டாய். அவன் மீது இட்டுக் கட்டிவிட்டாய் என்பதாகும்.
(ஆதாரம்: மிஷ்காத்)
அண்ணலாரின் அறிவார்ந்த உபதேசங்களையும் உயரிய வழிகாட்டுதலையும் பின்பற்றாது புறம்பேசும் குழப்பவாதிகளுக்கு உலகில் இழிவும், மறுமையில் கொடிய முடிவும் ஏற்படும். அவன் தனது தவறை தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றிக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிடும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான் என்று குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
எனவே கடுமையான இப்பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வதோடு ஏற்கனவே எவரைப் பற்றியாவது புறம்பேசியிருந்தால் அவரிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். புறம்பேசிய மனிதர் மரணித்து விட்டாராயின் அவருக்காக பாவமன்னிப்புக் கோர வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். நீ எவரைப்பற்றி புறம்பேசினாயோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென இறைவனிடம் நீ இறைஞ்சுவது புறம்பேசியதற்கான பிராயச்சித்தமாகும். அது இறைவா! நீ என்னையும் அவரையும் மன்னித்தருள்வாயாக! என்று இறைஞ்சுவதாகும். (ஆதாரம்: மிஷ்காத்)
கலாபூசணம்
யாழ். அஸீம்…