அ
ல்லாஹ்தஆலா அவனது இறைமார்க்கத்தின் பக்கம் எத்தகைய முறையில் அழைக்க வேண்டும் என்பதை அவனது அருள் மறையில் தெளிவாகக் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான். அதாவது, ‘விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக!” (அல் குர்ஆன் 16:125)
இந்த வழிகாட்டல், கட்டளைப்படியே அழைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதனை மீறி செயற்படலாகாது. நீங்கள் எவ்வளவுதான் சரியான பாதையில் இருந்தாலும், அடுத்தவர் எவ்வளவுதான் தவறான பாதையில் இருந்தாலும், அழைப்பு மொழியில் பண்பாடுகள் இல்லையென்றால் சத்தியம் வெறும் வாய்ச்சொல்லாகவே இருக்கும். பண்பாடுகள் முதன்மையானவை! முக்கியமானவை!
ஒரு தடவை மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்களது இல்லத்தினுள் ஒரு திருடன் நுழைந்தான். அங்கு அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவனிடம் மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “என் வீட்டில் உனக்கான உலகப் பொருட்கள் எதுவும் இல்லையே. மறுமைக்காக எதையாவது தரட்டுமா?” என்று கேட்டார். அதற்கு அந்தத் திருடன், “ஆம்” என்றான். “அப்படியானால் உளு செய்துவிட்டு வா. என்னுடன் இரண்டு ரக்அத்கள் தொழு” என்று கூறினார்.
அவன் அவ்வாறே செய்தான். பிறகு சற்று நேரம் அமர்ந்துவிட்டு, அவனையும் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றார். மாலிக் பின் தீனாருடன் திருடனைப் பார்த்த மக்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டனர். அதற்கு மாலிக் பின் தீனார், “இவர் நம்மிடம் திருட வந்தார். நாம் அவரைத் திருடிவிட்டோம்” என்றார்.
பண்பாடுகளைக் கற்றுக் கொடுக்கப் பணம் தேவையில்லை. நல்ல நடத்தையும் இன்சொல்லும் போதும். இன்றைய அழைப்பாளர்களுக்கு இது மிகவும் அவசியமானது.
எகிப்துப் பேரறிஞர் முஹம்மத் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களிடம் ஓர் இளைஞன் வந்து, “இஸ்லாமியச் சட்டம் குறித்துப் படிக்க விரும்புகிறேன். சட்ட நூல்களிலேயே சிறந்த நூல் எது?” என்று கேட்டான். அதற்கு அவர், “ஃபிக்ஹுஸ் ஸுன்னா. சமகாலத்தின் சிறந்த சட்ட நூல் அதுவே” என்றார்.
நன்றி கூறி விடைபெற்றுச் செல்ல முயன்ற அந்த இளைஞனிடம் அவர் கேட்டார், “சட்ட நூல் படிப்பது இருக்கட்டும். பண்பாடுகள் குறித்து ஏதாவது படித்திருக்கின்றாயா..?’ அவன், “இல்லை என்று கூறவும், அறிஞர் சொன்னார், “அவ்வாறெனில் நீ சட்ட நூலைப் படிக்காதே. முதலில் பண்பாடுகள் குறித்துக் கற்றுக்கொள். இல்லையேல் சட்டத் துறையை நீ நாசம் செய்துவிடுவாய்’ என்றார்.
அதுதான் நிதர்சனமான உண்மை! கூடும் கூடாது என்பதை மட்டும் அறிந்து வைத்திருப்பதல்ல ஞானம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருப்பதுதான் உண்மையான ஞானம். அதன் ஊடாகவே நல்ல பண்பாடுகள் வெளிப்படும். விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள மூலமும் இறைமார்க்கத்தின் பக்கம் அழைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
அதுவே இறை கட்டளையும்
நபிவழியும் ஆகும்.
யஹ்யா நியாஸ்…