முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் வாகனத்தின் பாகங்களை கொண்டு வந்து ஒருங்கிணைத்து அதனை பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் குறித்த சொகுசு வாகனம் கடந்த மாதம் 26ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வீடு லொஹான் ரத்தவத்தவின் மனைவிக்கு சொந்தமானது. அவர்கள் பயன்படுத்திய வாகனம் இலங்கையில் சட்டரீதியான பதிவுகளுக்கு உட்பட்ட ஒன்றல்ல எனவும் தெரியவந்தது.
அவற்றின் இலக்கத் தகடுகளும் அகற்றப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பில் முதலில் முன்னாள் அமைச்சர் லொஹான் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சுகயீனம் காரணமாக அவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அவரது மனைவியும் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.