பதிவு செய்யப்படாத சொகுசு வாகனமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் எம்.பி. லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) நுகேகொடை நீதவான் இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்
முன்னாள் எம்.பி. லொஹான் ரத்வத்த கண்டி கட்டுகஸ்தோட்டையில் வைத்து கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரை இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் உத்தரவிட்டார்.
மிரிஹான பகுதியில் உள்ள லொஹான் ரத்வத்தவின் மனைவியின் வீட்டிலிருந்தே குறித்த இலக்க தகடு இல்லாத, பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் மீட்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் லொஹான் ரத்வத்தவின் மனைவி கடந்த நவம்பர் 04ஆம் திகதி நுகேகொடை நீதவான் ருவினி ஜயவர்தன முன்னிலையில் தனது சட்டத்தரணி ஊடாக முன்னிலையான நிலையில் அவருக்கும் இன்றையதினம் (07)வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
இதேவேளை, லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய மற்றுமொரு வாகனம் தெல்தெனிய பகுதியில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.