Sunday, November 24, 2024
Home » காலி முகத்திடலை மீண்டும் நிகழ்வுகளுக்கு வழங்க தீர்மானம்

காலி முகத்திடலை மீண்டும் நிகழ்வுகளுக்கு வழங்க தீர்மானம்

- மாணவர்களுக்கு சீன மானிய பாடசாலை சீருடைத் துணி

by Prashahini
November 6, 2024 4:59 pm 0 comment

– குறைந்த வருமானங் கொண்டோருக்கு சீன நிதியுதவியில் 1,996 வீடுகள்
– இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் அதிகாரி
– 10.20 மில். டொலர் KOICA உதவியில் ஊவா, வடக்கில் திண்மக்கழிவு முகாமைத்துவ கருத்திட்டம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 முடிவுகள்

காலி முகத்திடல் மைதானத்தை வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு கொண்டாட்டங்களுக்குப் பொருத்தமான நிர்ணயங்களுக்கமைய பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகக் கம்பனியான இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனைச் சேவைகள் தனியார் கம்பனியின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற காலி முகத்திடல் மைதானம் சமய வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு 2023.04.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் ஏறத்தாழ ரூ. 2.5 மில்லியன் தொடக்கம் ரூ. 3 மில்லியன் வரை செலவு செய்யப்படுவதுடன், குறித்த தொகையை ஈடு செய்வதற்காகவும், 2023ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்றவாறு, உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக நடமாடக்கூடியதும், மிகவும் கவர்ச்சிகரமானதும், பாதுகாப்பானதுமான இடமாக மக்களுக்குச் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும் நோக்கில் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு கொண்டாட்டங்களுக்குப் பொருத்தமான நிர்ணயங்களுக்கமைய காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகளை வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க “தூய்மையானதும் பசுமையானதுமான காலி முகத்திடல்” எனும் எண்ணக்கருவுக்கு அமைய காலி முகத்திடல் மைதானத்தை நிர்வாக ரீதியாக மிகவும் முறைமை சார்ந்ததாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. 2025 ஆம் ஆண்டுக்கான சீன அரசால் நன்கொடையாக வழங்கப்படுகின்ற பாடசாலை சீருடைத் துணி, பாடசாலை மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு விநியோகித்தல்
2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த துணித் தொகைக்குரியவாறு கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளுக்கமைய, இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தின் (SLITA)) மூலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், குறித்த சீருடைத் துணிகள் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சீருடைத் துணியை விநியோகிப்பதற்கான சீன அரசின் நன்கொடையைப் பொறுப்பேற்பதற்காக கல்வி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3.100,000 கிலோமீற்றர் வீதிப் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட செலவுறுதிச் சிட்டைகளுக்கான கொடுப்பனவு
05 வருடகால கருத்திட்டக் காலப்பகுதியுடனான 100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு தொடக்கம் தேவையான நிதியொதுக்கீடுகள் கிடைக்காமையால், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது 28.37 பில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட வேண்டிய செலவுறுதிச் சிட்டைகள் காணப்படுகின்றன. அத்துடன் அத்தியாவசியமான வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2024 ஆம் ஆண்டில் 20 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் 1,000 கிலோமீற்றர் புனரமைப்புச் செய்வதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வேலைத்திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டியுள்ள செலவுறுத்திச் சிட்டைகளை ஈடு செய்வதற்காக 2024 ஆண்டில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதும், ஆனாலும் இதுவரை பயன்படுத்தப்படாத நிதியொதுக்கீட்டை முகாமைத்துவம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புறப்படுகை முனையத்தில் நாணய மாற்றுக் கருமபீடங்களை செயற்படுத்துவதற்கான பெறுகை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வெளியேறல் முனையத்தில் 05 நாணய மாற்றுக் கருமபீடங்களைச் செயற்படுத்துவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையைப் பின்பற்றி இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனுமதி பெற்ற வணிக வங்கிகள், அனுமதி பெற்ற விசேட வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று வணிகத்தில் ஈடுபட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக ஐந்து நிறுவனங்கள் (05) விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளன. அதற்கமைய, தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய 03 வருட காலத்திற்காக கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நாணயமாற்று கருமபீடங்களை செயற்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த விதந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கருமபீட இலக்கம் 25 ரூ. மில்லியன் 798.028 + வரியுடன் கூடிய தொகைக்கு இலங்கை வங்கிக்கும்,
• கருமபீட இலக்கம் 02 ரூ. மில்லியன் 633.662 + வரியுடன் கூடிய தொகைக்கு சம்பத் வங்கிக்கும்,
• கருமபீட இலக்கம் 04 ரூ. மில்லியன் 381.364 + வரியுடன் கூடிய தொகைக்கு கொமர்ஷல் வங்கிக்கும்,
• கருமபீட இலக்கம் 10 ரூ. மில்லியன் 299.064 + வரியுடன் கூடிய தொகைக்கு தோமஸ் குக் லங்கா (பிறைவெட்) லிமிட்டட் இற்கும்,
• கருமபீட இலக்கம் 11 ரூ. மில்லியன் 225.689 + வரியுடன் கூடிய தொகைக்கு ஹட்டன் நெஷனல் வங்கிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

5. வல்கம – தியகம வீதியின் (B 452) கிலோமீற்றர் 0+000 தொடக்கம் கிலோமீற்றர் 7+000 வரைக்குமான பகுதியை புனரமைப்புச் செய்தல் மற்றும் மேம்படுத்தல்
இறக்குவான – சூரியகந்த வீதியை மேம்படுத்துவதற்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகை சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கடன் தொகையில் எஞ்சியுள்ள கடன் தொகையைப் பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தின் வல்கம – தியகம வீதியின் (B 452) கிலோமீற்றர் 0+000 தொடக்கம் கிலோமீற்றர் 7+000 வரைக்குமான பகுதியை புனரமைப்புச் செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விலைமுறிகளைக் கோரியுள்ளது. அதற்காக 08 விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய இறக்குவான – சூரியகந்த வீதிக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள கடன் தொகையைப் பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தின் வல்கம – தியகம வீதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ரூ. 2.44 பில்லியன் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு மாகா இன்ஜினியரிங்க் பிரைவெட் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த விதந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டுகளை நிர்மாணித்தல்
குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல், 03 தொகுதியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சீன அரசால் பெயர் குறித்துரைக்கப்பட்டுள்ள விலைமனுதாரர்கள் 08 பேரிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய கீழ்வருமாறு ஒப்பந்தங்களை வழங்குவதற்காக கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொகுதி 01 –மொரட்டுவ 575 வீட்டு அலகுகள் மற்றும் கொட்டாவ 108 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s China Railway 25th Bureau Group Co.Ltd இற்கு வழங்கல்

தொகுதி 02 –தெமட்டகொட 586 வீட்டு அலகுகள் மற்றும் மஹரகம 112 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s China Harbor Engineering Company Ltd இற்கு வழங்கல்

தொகுதி 03 – பேலியகொட 615 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s Shanxi
Construction Investment Group Co.Ltd இற்கு வழங்கல்

7. இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் கடமையாற்றுவதற்காக அதிகாரி ஒருவரை நியமித்தல்
இணைந்த சேவைகள் பணிப்பாயர் நாயகமாகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான எஸ்.ஆலோக்கபண்டார 2024.10.03 தொடக்கம் நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டமையால், இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவி வெற்றிடமாகியுள்ளது. குறித்த பதவியில் பதில் கடமைக்காக நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. ஆர்.எம்.என்.ஈ.கே.ரணசிங்கவை நியமிப்பதற்காக நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. தேசிய சிறுவர் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் திருமதி. ப்ரீதி அனோமா சிறிவர்த்தனவை 06 மாதங்களுக்கு சேவையை நீடித்து வழங்கல்
தேசிய சிறுவர் அதிகாரசபை பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய திருமதி. ப்ரீதி அனோமா சிறிவர்த்தன 60 வயது பூர்த்தியடைந்தமையால் 2024.11.02 தொடக்கம் ஓய்வு பெறுகின்றார். தற்போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் மற்றும் மனிதவளம்) மற்றும் பணிப்பாளர் (நிதி) போன்ற உயர் முகாமைத்துவப் பதவி வெற்றிடங்கள் பல நிலவுகின்றன. இந்நிலைமையின் கீழ் குறித்த அதிகாரசபையின் நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகளை இடையூறுகளின்றி நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் திருமதி. ப்ரீதி அனோமா சிறிவர்த்தன அவர்களை 06 மாதகாலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் அமர்த்துவதற்காக மகளிர், சிறுவர் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 2024.12.01 தொடக்கம் 2025.05.31 வரையான காலப்பகுதியில் 92 Unl 05 பெற்றோல் கப்பல் தொகையைக் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
2024.12.01 தொடக்கம் 2025.05.31 வரையான காலப்பகுதியில் 92 Unl 05 பெற்றோல் கப்பல் தொகையைக் (1.5 மில்லியன் பரல்கள்) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தின் கீழ் விநியோகிப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து களஞ்சியப்படுத்தப்பட்ட தாங்கிகளிலிருந்த விநியோகிக்கும் போதான செலுத்தல் முறைமை மற்றும் கப்பல்சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களில் கடன் பத்திரத்தின் மூலம் செலுத்தல் முறைமை போன்ற மாற்று வழியான செலுத்தல் நிபந்தனைகளின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, 07 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப மதிப்பீட்டின் போது 03 விலைமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தம் கப்பல்சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களில் கடன் பத்திரத்தின் மூலம் செலுத்தல் முறைமையின் கீழ் சிங்கப்பூர் விடோல் ஏசியா தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் நிறுவகத்தின் தொழிநுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்புக்களின் பிரகாரம் ஊவா மாகாணம் மற்றும் வட மாகாணத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பேண்தகு ஒருங்கிணைந்த திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் சுழற்சிப் பொருளாதார அபிவிருத்திக் கருத்திட்டம்
ஊவா மாகாணம் மற்றும் வடமாகாணத்தின் உள்ளுராட்சி அதிகாரசபைகள் மட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் அதுதொடர்பான முகாமைத்துவப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 2024 – 2028 காலப்பகுதியில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு கொரிய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் நிறுவகத்தின் தொழிநுட்ப உதவிகள் மற்றும் கொரிய அரசின் நிதியுதவியைப் பயன்படுத்தி உத்தேசக் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. திறைசேரி உயர் முகாமைத்துவத்திற்கான அதிகாரிகளை நியமித்தல்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரி டீ.ஏ.பீ.அபேசேகரவை 2024.11.06 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திறைசேரியின் பிரதிச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையால், குறித்த பதவி வெற்றிடம் காணப்படுகின்றது. அத்துடன், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான என்.எஸ்.எம்.பீ.ரஞ்சித்தை 2024.11.10 தொடக்கம் 60 வயது பூர்த்தியடைந்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அன்று தொடக்கம் குறித்த பதவி வெற்றிடமாக உள்ளது. அத்துடன், திறைசேரியில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அரச கடன் முகாமைத்துவ அலுவலகப் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது. அதற்கிணங்க, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய கீழ்வரும் நியமங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
• தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் நாயகம் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான ஆ.எம்.எஸ்.பீ.எஸ்.பண்டாரவை 2024.11.06 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
• தற்போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் நெடுஞ்சாலைகள் பிரிவில் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரி திரு.எஸ்.எஸ்.முதலிகே அவர்களைகருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல் மற்றும் அவர் வகிக்கும் புகையிரத பொதுமுகாமையாளர் பதில் கடமை நியமனத்தை தொடர்ந்தும் அவ்வாறே பேணல்.
• திறைசேரியில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக, தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. உதேனி உடுகஹபத்துவை 2024.12.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்தல்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT