மலேசியாவில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றிரவு (05) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள மேலதி பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
33 வயதான குறித்த பெண்ணின் பயணப் பொதியில் இருந்து 5 கிலோ கிராம் ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக வெளியேற முற்பட்ட குறித்த பெண்ணை சோதனையிட்ட போது, அவரது உணவுப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போதைப்பொருள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து கடவுச்சீட்டை வைத்துள்ள இந்த பெண், நேற்று இரவு 11.55 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன் விமான சேவைக்குச் சொந்தமான SQ468 விமானம் மூலம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்தடைந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் நிறை சுமார் 5 கிலோ கிராம் எனவும் அதன் தெரு மதிப்பு ரூ. 100 மில்லியன் (ரூ. 10 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உதவியைக் கோரியுள்ளனர்.