பிரித்தானியாவின் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் புதிய தலைவராக நைஜீரியாவைப் பூர்வீமாகக் கொண்ட கெமி பேடெனாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
44 வயதாகும் இவர், அக்கட்சியின் முதல் கருப்பின பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கட்சித் தலைமைப் பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக்குடன் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் கெமி பேடெனாக்கை கட்சி உறுப்பினா்கள் புதிய தலைவராகத் தெரிவு செய்துள்ளனர்.