லியாம் லிவிங்ஸ்டனின் கன்னி சதத்தின் உதவியோடு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தொடரை 1–1 என சமநிலைக்குக் கொண்டுவந்தது.
இதன்மூலம் இரு அணிகளும் எதிர்வரும் புதன்கிழமை (06) ஆடும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது. அன்டிகுவாவில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களை விளாசியது.
முதல் இரு விக்கெட்டுகளையும் 12 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தபோதும் கியாசி கார்டி (71) மற்றும் அணித் தலைவர் ஷாய் ஹோப் (117) 3ஆவது விக்கெட்டுக்கு 143 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதன்போது இங்கிலாந்து அணி ஒன்பது வீரர்களை பந்துவீச்சுக்கு பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு பதில் தலைவராக செயற்படும் லிவிங்ஸ்டன் கைகொடுத்தார். மத்திய வரிசையில் அவர் 119 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை விளாசினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 329 ஓட்டங்களை எட்டியது.