சிவபெருமானுடைய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும், ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகிறது.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களகரமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மாங்கல்ய பாக்கியமும், கணவன், மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தும்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரியாகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.