இலங்கையில் காணப்படும் பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாக பெருமை சேர்த்த தொண்மை மிகு தொண்டீஸ்வரம் என்றழைக்கப்பட்ட சிவன் ஆலயம் கொழும்பில் இருந்து கதிர்காமம் செல்லும் வழியில் இலங்கையின் தெற்கு உச்ச முனையான தேவேந்திரமுனை (Devinuwara) அல்லது தெய்வேந்திரமுனை சுமார் 160 கிலோ மீட்டருக்கு அப்பால் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இவ் ஆலயம் இராமர் இராவணன் யுத்த காலத்துக்கு சமமான வரலாற்றை கொண்டதாகவும், இராமரின் வானரப் படை இவ் ஆலயத்தை அண்மித்த இராஸ்ஸன்தெனிய பகுதியில் முகாமிட்டு இருந்ததாகவும் மரபு வழி கதைகள் மூலம் எமக்கு அறியக்கிடைக்கின்றது.
இலங்கையில் குருநாகல் நகரை தம்பதெனிய இராச்சியத்தின் தலைநகரமாக கொண்டு கி.மு 1302 காலப் பகுதியில் ஆட்சி செய்து வந்த 2ஆம் பண்டித பாராக்கிரமபாகு என்ற அரசனின் ஆணையின் படி அன்றிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பௌத்த சம்பிரதாயங்களை தழுவிய பெரஹரா எனப்படும் தெய்வ வழிபாட்டு ஊர்வலம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
சந்திரபானு என்படும் ஜாவா நாட்டு சிற்றரசன் இலங்கையை ஆக்கிரமித்து (கி.பி 1230 – 1236) சில காலம் ஆட்சி செய்து வந்ததாகவும் அக் காலப் பகுதியில் நடைபெற்ற வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளில் இருந்து இலங்கை சிங்கள மக்களை பாதுகாத்து தரும் படியும் தனக்கு ஏற்பட்ட கொடிய நோய் தீர்க்க வேண்டியும் எம்பெருமான் சிவனிடம் செய்து கொண்ட வேண்டுதலின் அடிப்படையில் இவ் ஆலயத்தில் வருடா வருடம் தெய்வ வழிபாட்டு வீதி உலா நடத்தியதாகவும் ஒரு ஐதீகம் உண்டு. இவ்வாலயம் தொடர்பில் பல்வேறு முக்கிய சான்றுகளை மகாவம்சம், மதுர, கோகில, திஷர, பறவி சந்தேஷ போன்ற வரலாற்று காவியங்களிலும் எகிப்திய பூர்வீகத்தை கொண்ட கிரேக்க நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர், புவியலாளர் தொலெமி குளோடியசு என்பவரின் பயணக் குறிப்புகளில் இருந்தும் ஆலயத்தில் காணப்படும் சில கல்வெட்டுகளில் இருந்தும் மேலும் கண்டறியலாம்.
இலங்கையின் கரையோர பகுதியை பறங்கியர் (போர்த்துகேயர்) கைப்பற்றி ஆட்சி செய்து வந்த சமயம் (1505 – 1658) இலங்கையின் ஆதி குடிகளாக கருதப்படும் இயக்கர், நாகர் காலம் தொட்டு தென்னகத்தே தமிழனின் பூர்வீக வரலாற்றை பறைசாற்றி வந்த மேற்படி பழம் பெரும் சிவன் ஆலயம் சிதைத்து இடித்தழிக்கப்பட்டது. அதன் பின்னர் இதே இடத்தில் சிங்களவர்களால் நீல வர்ண கடவுள் எனப்படும் விஷ்ணுவுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு தற்போது விஷ்ணு வழிபாடு நடைபெற்று வருகின்ற போதிலும் பெரும்பான்மை பௌத்தர்கள் இப் பகுதியில் அதிக அளவில் குடி கொண்டுள்ள காரணத்தால் இந்த ஆலய வளவில் பௌத்த விஹாரைகளும் புத்தர் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் மேலோங்கி காணப்படுகின்றது.
போர்த்துகேயரினால் சிவன் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட பின்னர் தென் கடலில் மிதந்து வந்ததாக புராண இதிகாசங்களில் செல்லப்படும் செந்நிற சந்தன குற்றியிலான விஷ்ணு பகவானுடைய சிலையை வைத்தும் சிங்களவர்களின் இஸ்ட தெய்வங்களான “தெடிமுண்ட” மற்றும் “சூனிய” கடவுளின் சிலைகளை வைத்தும் இன்றைய நாட்களில் பக்தர்கள் வழிபட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருளியல் ஆய்வாளர்களினால் மேற்கொண்ட போது கிடைக்கப்பெற்ற வித்தியாசமான சிவலிங்கம் மற்றும் சில சான்றுகளின் பின்னர் தொண்டீஸ்வரர் ஆலயத்தின் வரலாறும் ஆய்வுகளும் மூடி மறைக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது. இதனைத் தவிர வடக்கே யாழ்பாணம், கீரிமலை பகுதியில் உள்ள நகுலேஸ்வரம் சிவன் ஆலயமும், கிழக்கே திருக்கோணமலை மா நகரில் திருக்கேதீஸ்வரமும், மேற்கே சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரமும், வடமேற்கில் மன்னாரில் காணப்படும் திருக்கேதீஸ்வரமும் சிவபூமியாம் சேரன் தீவு எனப்படும் இலங்கையில் புகழ்பெற்ற ஏனைய சில சிவன் ஆலயங்கள் ஆகும்.
நாராயணசாமி ஜெயரட்ணம் களுத்துறை சுழற்சி நிருபர்