பாண்டியன் சமணர்களை நோக்கி, “சமணர்களே! நீங்கள் தோற்றுப் போனீர்கள். என்னை விட்டு அகலப்போய் விடுங்கள்” என்று சொல்லி, பின் பிள்ளையாரை நோக்கி, “அடியேனை ஒரு பொருளெனக் கொண்டு உய்வித்த காருண்ணிய சாகரமாகிய சுவாமி! இடப்பாகத்து வெப்பையும் தேவரீரே நீக்கியருளும்” என்று மனசினால் வணங்கி பிரார்த்தித்தான். பிள்ளையார் இடப்பாகத்தையும் முன்போல விபூதி கொண்டு தடவியருள; பண்டியன் வெப்புநோய் முழுதும் நீங்கி உய்ந்தான். அதுகண்ட பாண்டிமாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் பிள்ளையாருடைய திருவடிகளிலே விழுந்து நம்ஸ்கரித்து, “எங்கள் அரசர் பிறவா மேன்மை பெற்றனர்” என்று களிப்படைந்தார்கள். பாண்டியர் சயனத்தைவிட்டு எழுந்து, இரண்டு கைகளையும் சிரசின்மேலேறக் குவித்து, “பொய்யராகிய சமணர் கண்முன் அடியேனுடைய நோயை நீக்கியருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய ஸ்ரீ பாதங்களை அடைந்து, “உய்ந்தேன் உய்ந்தேன்” என்றார்.
சமணர்கள், பிள்ளையாருடைய சொல்வெற்றியை, அவர் தமிழ்ப் பதிகத்தினாலே பாண்டியனுடைய வெப்புநோயை நீக்கினமையால் அறிந்த பின், தருக்கம் பேசி இவரை வெல்லுதல் கூடாது. அக்கினியினாலும் ஜலத்தினாலும் வெல்லல் வேண்டும் என்று தங்களுக்குள்ளே சிந்தித்தார்கள். பிள்ளையார் சமணர்களை நோக்கி, “இனி உங்கள் சமய நூற்றுணிவைப் பேசுங்கள்” என்று அருளிச் செய்ய; சமணர்கள் “தருக்கம்பேசி வெல்ல வேண்டுவதில்லை. நாமிருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயவுண்மையை உள்ளபடி பிரத்தியக்ஷமாகக் காட்டி வெல்லுவோம்” என்று ஒட்டினார்கள். அப்பொழுது பாண்டியராஜர் “என்னுடைய வெப்புநோயை நீங்கள் ஒழித்திலீர்கள். உங்களுக்கு என்ன வாது” என்று சொல்ல; சமணர்கள் அரசர் உங்களுக்கு என்ன வாது” என்றதையே வினாவாகக் கொண்டு, “நாங்கள் இருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயக்கருத்தை ஏட்டிலே தீட்டி, அக்கினியில் இடக்கடவோம். வேவப் பெறாமையே வெற்றி” என்றார்கள். அப்பொழுது அரசர் ஒன்றுஞ்சொல்லு முன், பிள்ளையார் “நீங்கள் சொல்லியது நன்று. அரசனெதிரே அப்படியே செய்வோம், வாருங்கள்” என்று சொல்லியருளினார். பிள்ளையாருடைய ஆஞ்ஞையினாலே பாண்டியர் சபை முன்னே அக்கினி அமைக்கும் படி ஏவலாளர்களை ஏவ; அவர்களும் அக்கினி அமைத்தார்கள். பிள்ளையார் சமீபத்திலே எழுந்தருளி வந்து, பரமசிவனே மெய்ப்பொருள் என்று தாம் பாடியருளிய தமிழ்வேதத் திருமுறையை ஸ்தோத்திரஞ்செய்து, “நம்முடைய சிவபெருமானே பரம்பொருள்” என்று சொல்லி வணங்கி, திருக்கரத்தினால் எடுத்து, சிரசின் மேற்கொண்டு, திருக்காப்பிட்ட கயிற்றை அவிழ்த்து, அத்திருமுறையைத் தமது திருக்கரத்தினால் மறிக்க; திருநள்ளாற்றின் மேலதாகிய “போகமார்த்த பூண்முலையாள்” என்னுந் திருப்பதிகம் வந்து நேர்ந்தது.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு