Friday, November 1, 2024
Home » திறமையுள்ள வீரர்களுக்கே தேசிய அணியில் முன்னுரிமை

திறமையுள்ள வீரர்களுக்கே தேசிய அணியில் முன்னுரிமை

யாழ். நாவாந்துறை சென்மேரிஸின் உதைபந்தாட்ட​ வீரர் மரியதாஸ் நிதர்சன்

by Gayan Abeykoon
November 1, 2024 1:11 am 0 comment

வ்வொரு  மனிதனுக்குள்ளும் நிறைந்திருக்கும்  ஆற்றல்கள்  வெவ்வேறுபட்டவை. ஆனால்  சிலர் தனக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை அறியாமல் ஏதோவொரு துறையில் வேண்டாவெறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்றும் தமக்கு பிடித்த  துறையில் பயணிக்கும் போதே உண்மையான சந்தோஷம் கிடைக்கின்றது. அந்தவகையில்  பாடசாலைக் காலம் முதலே தனக்கு ஆர்வமான துறையினை அடையாளம் கண்டு,  அன்று முதல்  தமக்கு பிடித்த துறையில் பயணித்து கொண்டிருக்கும் மற்றும் தேசிய ரீதியிலும்  பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும் உதைபந்தாட்ட வீரர்  யாழ்.  நாவாந்துறை சென் மேரிஸ் அணியின் நட்சத்திர வீரரான மரியதாஸ் நிதர்சன்.

கேள்வி : பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான உங்களது வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தைக் கூறுங்கள்

பதில்:  எனது பெயர் மரியதாஸ் நிதர்சன் எனது ஆரம்பக்கல்வியை யாழ். நாவாந்துறை  றோ.க.தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியினை புனித பத்திரிசியார்  கல்லூரியிலும் கற்றேன். எனது குடும்பத்தில் 6 உறுப்பினர்கள். நான் கடைசிப்  பிள்ளை.  சிறு வயது முதலே உதைபந்தாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம். எனது  தந்தையார் ஒரு உதைபந்தாட்ட வீரர் அத்தோடு எனது உடன் பிறந்த இரு மூத்த  சகோதரர்களும், உதைபந்தாட்ட வீரர்கள், அத்தோடு எமது நாவாந்துறை மண்ணின்  அடையாளமாக உதைபந்தாட்டம் விளங்குவதால் எனக்கு உதைபந்தாட்டம் மீது இயல்பாகவே  அதீத ஆர்வம் ஏற்பட்டது.

கேள்வி:  பல துறைகளில் சாதித்து வரும்  இளைஞர்கள் மத்தியில், பாடசாலை காலம் முதலே உதைபந்தாட்டத்தில் உங்களுக்கு  உண்டான ஆர்வம்  பற்றிக் கூற முடியுமா?

பதில்: இன்றைய சூழலில்  பல்வேறுபட்ட துறைகளிலும் பலர்  பல்வேறு சாதனைகள் புரிந்து  வருகின்றார்கள்.   அதுமட்டுமன்றி உலகளவிலும் பல சாதனைகளை புலம்பெயர் தேசங்களிலும் படைத்து  வருகின்றார்கள்.  பாடசாலைக் காலம் முதலே எனக்கு உதைபந்தாட்டத்தில் மிகுந்த  ஆர்வம்.   எமது ஊரிலே இரவுப்பாடசாலை  நடைபெறுவது வழமை இரவுநேரங்களில் மாணவர்களை ஒன்றிணைத்து அங்குள்ள இளைஞர்கள்  கல்வியினை வழங்குவார்கள். அவ்வாறு நான் இரவுப் பாடசாலைக்கு செல்கின்றபோது  எனது தந்தையாருடன் எமது விளையாட்டு மைதானத்தை சுற்றி நின்று எமது வீரர்கள்  விளையாடுவதை இரசிகர்கள், இரசித்துக்கொண்டிருப்பார்கள். அதைப் பார்க்கும்போது  எனக்கும் அந்த உதைபந்தாட்டம் விளையாட வேண்டும். நானும் அவ்வாறு விளையாட்டு வீரனாக உருவாக  வேண்டும் என்ற ஆர்வம் என்னில் உருவானது.  அதனால்   ஆரம்பக்கல்வி கற்ற   நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில், பாடசாலை மட்டங்களிலான  போட்டிகளில் பங்குபற்றினேன். எமது அணியானது, வலயமட்டம்,  மாவட்ட மட்டம், மாகாண  மட்டம் எனப்  பலதரப்பட்ட நிலைகளிலும் சாதனைகளை புரிந்தது. அந்த அணிக்கு நான்  தலைமைதாங்கியிருந்தேன். இவ்வாறாக பாடசாலைக் காலங்களில் பல வயதுப் பிரிவுகளில்  நான் சிறுவயது முதலே இந்த உதைபந்தாட்டம்  விளையாடி வருகின்றேன்.  அதுமட்டுமன்றி உயர்தரத்திற்காக எமது பத்திரிசியார் கல்லூரியில் கல்வி  கற்றவேளை, எமது பத்திரிசியார் கல்லூரி அணி, பல மாகாண மட்டங்கள்  தேசியமட்டங்களிலும், சாதனை படைத்திருக்கின்றது. அந்த அணியினுடைய  அணித் தலைவராகவும், அணி வீரராகவும் நான் விளையாடியிருக்கின்றேன். பாடசாலைகளில்   பல விருதுகளையும் பெற்றிருக்கின்றேன். அது என்றுமே என் வாழ்வில்  மறக்கமுடியாதது.

கேள்வி: கழக மட்டங்களில் மட்டுமன்றி தேசிய  மட்டத்திலும் குறிப்பாக இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்திருந்தீர்கள்  அது பற்றிய உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:  கழக மட்டங்களில் யாழ்- நாவாந்துறை சென்.மேரிஸ் அணிக்காக விளையாடி  வருகின்றேன். எமது அணியானது, பல சாதனைகளை படைத்திருக்கிறது. அதன் சாதனைகளில்  நானும் ஒரு பங்குதாரராக இருப்பதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய மட்ட  போட்டிகளை பொறுத்தவரையில், வட மாகாணத்திலிருந்து பல வீரர்கள் இலங்கை தேசிய  அணிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.  அதில்  நானும் ஒருவர். எமது கழகத்தைத்  தவிர,  இலங்கையின் முதற்தர கழகங்களான சொலிட், கொழும்பு ரட்ணம்ஸ் போன்ற  கழகங்களுக்காகவும் விளையாடி இருக்கிறேன்.

கேள்வி: கடந்த 3 வருடங்களாக  மாகாணங்களுக்கிடையிலான தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில்  தொடர்ந்து 3 தடவைகள் வெற்றி வாகை சூடி உள்ளீர்கள் ஒரு வருடம் அணித்  தலைவராகவும் அணியை வழிநடத்தியது மட்டுமன்றி பல விருதுகளையும்  வசப்படுத்தி உள்ளீர்கள்.  அதுபற்றி…?

பதில்:  இலங்கையில்  மாகாணங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் ஒவ்வொரு  வருடமும்  மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எமது  வடமாகாண அணி, சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணியின்  அணித் தலைவராகவும், சக வீரராகவும் விளையாடி உள்ளேன்.  அதிலும் குறிப்பாக  கடந்த வருடம் இடம்பெற்ற வடமாகாண அணிகளுக்கு இடையிலான போட்டித்தொடரில்   சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் தொடர் ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றமை எமது  உதைபந்தாட்ட வரலாற்றில் மறக்க முடியாதவை.

கேள்வி: தற்காலச்  சூழலில் தேசிய அணியில்  தமிழ் பேசும் வீரர்களை இணைத்துக் கொள்வதில்  பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற  நிலையில், உங்களைப்போன்ற பல தமிழ் பேசும் வீரர்கள் தேசிய அணியில்  இடம்பிடித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அது பற்றிய உங்களது  கருத்துக்கள்?

பதில்: என்னைப்பொறுத்த மட்டில் பாரபட்சம் என்பதனை  தாண்டி தற்காலத்தில் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி வீரர்கள் தேசிய  அணிக்குள் உள்ளீர்க்கப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் வீரர்கள் பலர்  வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தேசிய அணிக்கு தெரிவு  செய்யப்பட்டு, தற்போதும் விளையாடி வருகின்றனர்.  இலங்கை தேசிய அணிக்காக  விளையாடுவதனை நாங்கள் பெரிய கௌரவமாக கருதுகிறோம்.

கேள்வி: எவ்வாறான  முன்னாயத்தங்களை மேற்கொள்வதன் மூலமாக சிறுபான்மையின மக்களும் தேசிய  அணிகளில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்?

பதில்: சிறுபான்மையினர் மட்டுமன்றி  திறமையுள்ள அனைத்து வீரர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை  பயன்படுத்தி தமது திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் தேசிய  அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். விடாமுயற்சியுடன் கூடிய கடின  பயிற்சிகள் மற்றும் அனுபவங்கள் அவர்களை தேசிய அணிக்கு தேரிவு  செய்யப்படுவதற்கு உந்து சக்தியாக அமையும்.

கேள்வி: தேசிய அணிக்காக பல நாடுகளில் விளையாடிய உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:  இலங்கை தேசிய அணிக்காக பல நாடுகளுக்கு சென்று விளையாடி உள்ளோம்  வெளிநாடுகளிலுள்ள காலநிலை எமக்கு பாரிய சவாலாக அமைந்தது. அங்கு நிலவுகின்ற  குளிர் மற்றும் வெப்பநிலை மாற்றங்களால் வீரர்கள் உடல் ரீதியாக  பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.

குறித்த நாடுகளுக்கிடையிலான  போட்டிகளுக்காக, எமது அணி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே அந்தந்த  நாடுகளுக்கு செல்லும். அங்கு எமது நாட்டை விட வெளிப்புறச்சூழல் வித்தியாசமாக  இருக்கும். இதனால் வீரர்கள் எளிதில் உடல் சோர்வடைவார்கள். அது தவிர நாம்  புதிய அனுபவங்களையும் உதைபந்தாட்ட நுட்பங்களையும் அறிந்து கொள்ள இந்த  போட்டிகள் வாய்ப்பாக அமைந்திருந்தது.

கேள்வி: உங்களது சாதனைப் பதிகள் பலவற்றை நாங்கள் அறிவோம். இருப்பினும் உங்களுக்கு என்றுமே மறக்க முடியாத சாதனைகள் பற்றி கூற முடியுமா?

பதில்:  எமது கழகத்தை பொறுத்த மட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறது இலங்கையின்  பிரிவு-2 போட்டியிலே வெற்றி பெற்று பிரிவு-1 போட்டிகளில் விளையாடி வருகின்ற  ஒரேயோரு வடமாகாண தமிழ் பேசும் தனி ஒரு கழமாக சென்.மேரிஸ் அணி  விளங்குகிறது. இலங்கையின் சாம்பியன் லீக் போட்டிகளிலும் விளையாடி உள்ளது  உள்ளூர்மட்ட போட்டிகளில்  மைலோ கிண்ணத்தை 3 தடவைகள் சுவீகரித்துள்ளது எமது  அணி. இந்த போட்டிகளில் பல தடவைகள் சிறந்த வீரர் மற்றும் சிறந்த தொடர்  நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளேன் இன்றும் எமது அணிக்காக விளையாடி  வருகின்றேன்.

கேள்வி: வளர்ந்து வரும் இளம் சந்ததியினருக்கு ஒரு தேசிய அணி வீரராக நீங்கள் கூற விளைவது என்ன?

பதில்:  இன்றைய சூழலில் பல்வேறுபட்ட துறைகளிலும் பல்வேறு சாதனைகள் புரிந்து   வருகின்றார்கள் .அதுமட்டுமன்றி உலகளவிலும் பல சாதனைகளை புலம்பெயர்  தேசங்களிலும் படைத்து வருகின்றார்கள். எமது சமூகத்திற்கு இப்போது தேவையான  ஒன்று ஒற்றுமைதான். ஒருவன் முன்னே செல்லும்போது கூட இருப்பவர்கள் அவனை  ஏற்றி விடும் ஏணிப்படிகளாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதும்  ஒற்றுமை என்பது ஒரு பலமான ஆயுதம் அதை சரியாக வளர்ந்து வரும் வீரர்கள்  புரிந்துக்கொண்டால் எமது சமூகம் இன்னும் பல படிகளை கடக்க நிச்சயம்  வாய்ப்புகள் அதிகம்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x