இஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது. கோத்திரச் சண்டை ஓயாத சூழலில் சில கோஷ்டியினர் வெல்வதும், வேறுசில கோஷ்டியினர் தோல்வியடைவதும் வழக்கமாகி இருந்தது. தோல்வியடைந்தவர்கள் தங்களது செல்வங்களையும் மனைவி மக்களையும் வென்றவர்களிடம் பறிகொடுப்பதும் சாதாரணமாக இடம்பெற்றது. அவ்வாறு பறிகொடுக்கப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிராசாரத்தை முன்னெடுக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே இந்த சமூக நோய்க்குப் பரிகாரம் காண்பதில் அக்கறை செலுத்தத் தொடங்கினார்கள்.
காலம் காலமாக மக்களிடையே ஊறிப்போன மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்துக்கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வன்மையாகக் கண்டிப்பதன் மூலம் மட்டும் காரியம் சாதித்துவிட முடியாது என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் புரிந்துகொண்டார்கள். அற்கேற்ப மிகச் சிறந்த வழிமுறைகளினூடாக நபி (ஸல்) அவர்கள் அடிமைத்தளையை ஒழித்துக்கட்டினார்கள்.
அடிமைகளை ஒழித்துக்கட்டவும் அடிமை விலங்கொடிக்கவும் முடிவு செய்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு:
1). அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற சிந்தனையையும் உணர்வையும் மக்களிடையே பரப்பினார்கள். இறைவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படுமே தவிர, வேறு எதிலும் கிடையாது என்று சிந்தனையை மக்கள் மனங்களில் கட்டியெழுப்பினார்கள்.
2). மக்கள் மனங்களில் அன்பு, அரவணைப்பு, ஆதரவு, ஆறுதல் கூறுதல், கருணை ஆகிய அருங்குணங்களை வளர்த்து, அப்போதிருந்த அடிமைகளை அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தச் செய்தார்கள்.
3).அடிமையாக இருந்தாலும் எஜமானருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தால் அவள் அடிமைத்தளையில் இருந்து தாமாகவே விடுதலை பெற்றுவிடுவாள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அத்துடன் அந்த குழந்தையும் அடிமையல்ல எனும் நியதியை வகுத்தார்கள். இதன் மூலம் அப்பாவி மக்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகத் தொடரும் பரிதாப நிலையை மாற்றி அப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
4). அடிமைகளை விடுவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் என்ற கருத்தை அன்னார் அறிமுகம் செய்தார்கள். இதனால் நபித்தோழர்கள் பலரும் இறை திருப்தியை நாடி தங்களிடம் இருந்த அடிமைகளை உடனடியாக விடுவித்தனர்.
5) சன்மார்க்க விவகாரங்களிலும் பொதுப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்ல அடிமைகளுக்கு இறைத்தூதர் (ஸல்) சுதந்திரம் கொடுத்தார்கள்.
6) அல்லாஹ்வுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை எஜமானர் சொன்னாலும் செய்யக்கூடாது. காரணம், ‘அனைவருக்குமான ஒரே எஜமான் அல்லாஹ் மட்டுமே’ என்ற உணர்வை மேலோங்கச் செய்து அடிமை மனப்பான்மையை ஒழித்தார்கள்.
7) அடிமைகள் தங்களை விடுதலை செய்துகொள்ள நாடி விடுதலைப் பத்திரம் எழுதினால், அதற்கான பணத்தை ஸக்காத் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை இறங்கியது.
8) சூரிய கிரகணமோ, இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது என்று நபி (ஸல்) அவர்கள் ர்கள்.
(ஆதாரம்: புஹாரி)
அஸ்மா பின்த் அபீபக்கர் (ரழி) கூறியுள்ளதாவது, ‘நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம்.
(ஆதாரம்: புஹாரி)
9) பல்வேறு குற்றங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதைக் குற்றப்பரிகாரங்களில் முதல் விடயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக; அ) ஒரு முஸ்லிம் தம் மனைவியுடன் ரமழானின் பகல் பொழுதில் உடலுறவு கொள்வதன் மூலம் நோன்பை முறித்துவிட்டால், இச்செயலுக்குத் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
ஆ) ஹஜ் கடமையை நிறைவேற்றும்போது இத்தகைய உறவில் ஈடுப்பட்டாலும் இதே தண்டனை உண்டு என இஸ்லாம் அறிவித்தது.
இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அந்த அடிமையை உரிமை விட்டவரை நரக நெருப்பில் இருந்து காப்பாற்ற உதவும் என்றும் அறிவித்தார்கள். (ஆதாரம்: புஹாரி)
இதனைச் செவியுற்ற ஆரம்ப கால முஸ்லிம்கள் தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் இருந்த அடிமைகளையும் விலைகொடுத்து வாங்கி இயன்ற அளவுக்கு உரிமை விட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அன்னாரின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் எண்ணிலடங்கா அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அப்பாஸ் (ரலி) 70 அடிமைகளையும், இப்னு உமர் (ரலி) 1000 அடிமைகளையும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) 30 ஆயிரம் அடிமைகளையும் விடுதலை செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
அடிமைகளாக ஆக்கப்படுவோரிடம் மனித நேயத்தோடும் சகோதர பாசத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி மூச்சின்போதுகூட “அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்கள்”
(ஆதாரம்: புஹாரி).
‘அடிமை என்று அழைப்பதற்குக்கூட நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’
(ஆதாரம்: புஹாரி)
இத்தகைய அருமையான மனிதாபிமானம் மிக்க திட்டங்களின் விளைவாக நாற்பது ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய உலகில் இருந்து அடிமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அடிமைகளை விடுதலை செய்ய இவையல்லாத வேறு வழிமுறைகளைக் கையாண்டிருந்தால், சமூகத்தில் அடிமனதில் புரையோடிப்போயிருந்த இந்த அடிமை நோய் முற்றிலும் துடைக்கப்படாமல் இருந்திருக்கும்.
இன்று அடிமை வியாபாரம் அரபு நாடுகளில் கிடையாது. அதேசமயம் காலம் காலமாக மக்களை பல கோணங்களில் அடிமைகளாக்கி, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி, முதலாளித்துவத்தின் பெயரால் அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் போக்கு மேற்கத்திய நாடுகளில் இன்னும் தொடரத்தான் செய்கிறது என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.