அரசியல் ரீதியாகவும் உறவினர்கள் என்ற வகையிலும் கடந்த அரசாங்க காலத்தில் பல்வேறு நாடுகளிலும் தூதரக சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள 16 அதிகாரிகளை, உடனடியாக மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கிணங்க அந்த அதிகாரிகள் மீள நாட்டுக்கு வரவுள்ளதாகவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய ராஜ்யத்தில் இலங்கைக்கான கொன்சியூலர் நாயகமாக பதவி வகித்த டாக்டர் லலித் சந்ரதாச, சீனாவில் ஷங்கை நகரில் இலங்கை கொன்சியூலர் ஜெனரலாக பதவி வகிக்கும் அனுர பெர்னாண்டோ, சென்னையில் பிரதி உயர்ஸ்தானிகராக பதவி வகிக்கும் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட வர்களையே, நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சவூதி அரேபியாவில் ஜித்தா நகரில் கொன்ஸியூலர் நாயகமாக கடமையாற்றிய எஸ். எம். ஏ. எப்.மௌலானா, அமெரிக்க வொஷிங்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் மினிஸ்டராக பணிபுரிந்த நிஷான் மெனிக் முத்துகிருஷ்ணா மற்றும் மூன்றாவது செயலாளராக பணிபுரிந்த தாரக திசாநாயக்க ஆகியோரும் இந்த திருப்பியழைக்கும் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் மூன்றாவது செயலாளராக பணிபுரிந்த செனிய புஞ்சி நிலமே, பிரான்சில் பரிஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் மூன்றாவது செயலாளராக பணிபுரிந்த சகஸ்ர பண்டார, இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாவது செயலாளராக பணிபுரிந்த மெல்கி சந்திமா பெரேரா, அவுஸ்திரேலியாவில் கென்பரா நகரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் மூன்றாவது செயலாளராக பணிபுரிந்த தினுகா கார்மலின் பெர்னாண்டோ புள்ளே, ரஷ்யாவின் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் ஆலோசகராக பணிபுரிந்துள்ள பண்டுல டி சொய்ஸா, இந்தியாவின் புது டெல்லி இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பிரசிடெண்ட் ஆலோசகராக பணிபுரிந்துள்ள கலாநிதி அன்வர் மொகமட் ஹம்தானி, லெபனானின் பெய்ரூத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக பணி புரிந்துள்ள பிரியங்கா திசாநாயக்க மற்றும் துருக்கியிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் இரண்டாவது செயலாளராக பணிபுரிந்துள்ள யஸ்மின் ஹில்மி மொஹமட் ஆகியோரும் இவ்வாறு மீள அழைக்கப்படவுள்ளனர். இதனைத் தவிர நெதர்லாந்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் ஆலோசகராக பணிபுரிந்த அஸ்வினி ஹபங்கம மற்றும் ஜெர்மனி தூதுவராலயத்தில் மினிஸ்டர் ஆலோசகராக பணிபுரிந்துள்ள, ஜனக ரணதுங்க ஆகியோரும் நாட்டுக்கு மீள அழைக்கப்பட உள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்