அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் உட்பட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது
இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரியநீலாவணை, உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வீரமுனை ,மருதமுனை, மண்டூர் போன்ற பகுதிகளிலும் அதிகளவான வீடுகள் உடைத்து நகை ,பணம் திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீட்டின் யன்னல் கிறில் மற்றும் ஓடுகள் பிரிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதவிர மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெரும்பாலும் பொது இடங்களில் தரித்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும் அதிலிருக்கும் பொருட்கள் என்பன திருடப்பட்டு வருகின்றன. மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சி.சி.டிவி காணொளிகளிலிருந்து தெரியவந்துள்ளது. எனவே இரவு நேரத்தில் வீட்டின் மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன், வீட்டின் யன்னலுக்காக பொருத்தப்படும் கிறிலை உறுதியான வகையில் பொருத்திக் கொள்ளுமாறும் , சீலிங் பேன் பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால் அதிக சத்தம் இடும் இவ்வாறான மின்விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளனர். அத்துடன் பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்துக்கிடமாக மாஸ்க், தொப்பி அல்லது தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேகநபர்கள் இதுதொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(காரைதீவு குறூப் நிருபர்)