– இஸ்ரேலில் இராணுவ வீரர்களுக்கு பற்றாக்குறை
வடக்கு காசாவில் இஸ்ரேலின் முற்றுகை மற்றும் படை நடவடிக்கை தொடரும் நிலையில் அங்குள்ள பெயித் லஹியா பேரனர்த்த வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடக்கம் நீடிக்கும் வடக்கு காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,250 ஆக அதிகரித்துள்ளது.
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல், பெயித் லஹியாவில் கடந்த பல வாரங்களாக உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த செவ்வாயன்று அங்குள்ள ஐந்து மாடிக் கட்டடம் ஒன்றின் மீது நடத்திய வான் தாக்குதலில் நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ‘பயங்கரமானது’ என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் இது ஒரு பயங்கர விளைவுகளை ஏற்படுத்திய பயங்கரச் சம்பவம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மத்தியூ மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பெயித் லஹியாவில் இஸ்ரேல் நேற்றும் செல் குண்டு மற்றும் வான் தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். முழு நகருமே சின்னபின்னமாக்கப்பட்டிருக்கும் சூழலில் பெயித் லஹியா மாநகர சபை அந்த நகரை பேரனர்த்த வலயமாக அறிவித்துள்ளது.
வடக்கு காசாவில் காசா நகர், ஜபலியா அகதி முகாம் என அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலியப் படை பயங்கரத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
காசா நகரின் மேற்கே உள்ள ஷெய்க் ரத்வான் சந்தைக்கு அருகே இஸ்ரேல் நேற்று நடத்திய செல் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் வரை காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. இதில் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட அதிகமானோர் சிறுவர்களானவர்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 102 பேர் கொல்லப்பட்டு மேலும் 287 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,163 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவது ஆண்டை தொட்டிருக்கும் காசா போரில் 101,510 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் சாரபான்ட் மற்றும் ஹரேத் செய்தா பகுதிகளில் இடம்பெற்ற புதிய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு ஒன்றை அமெரிக்க மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே காசா மற்றும் லெபனான் இரு முனைகளிலும் சண்டையிட்டு வரும் இஸ்ரேலிய இராணுவத்தில் வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, போர்க்காலப் படை வீரர்கள் சுமார் 300,000 பேர் சண்டையிட அழைக்கப்பட்டனர். அவர்களில் 18 வீதத்தினர், விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 40 வயதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள்.
இஸ்ரேலில் 18 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இராணுவச் சேவை கட்டாயமாகும். கடந்த ஆண்டு (2023) ஒக்டோபரிலிருந்து காசாவில் 367 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் 37 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
பணிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் இயல்பு வாழ்க்கைக்கு 6 மாதம் வரை திரும்ப முடியவில்லை என்றும் போர்க்காலப் படை வீரர்கள் சிலர் குறை கூறியுள்ளனர். வேலையை இழக்க நேரிட்டதாகவும் ஒரு சிலர் குறிப்பிட்டனர்.