அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் நிவ்யோர்க்கின் டைம் சதுக்கத்தில் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பில் நிவ்யோர்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தமது ‘எக்ஸ்’ தள பதிவில், ‘முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி பண்டிகையை இந்திய அமெரிக்க சமூகத்தினர் அமெரிக்க நண்பர்களுடன் இணைந்து வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய அமெரிக்க சமூகத் தலைவர் நீதா பாசின் ஏற்பாடு செய்திருந்த இவ்வைபவத்தில் நிவ்யோர்க்கின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், நிவ்யோர்க் நகர மேயர் எரிக் அடம்ஸ், இந்திய-அமெரிக்க சட்ட வாக்க சபை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கொண்டனர்.
இதேவேளை, பென்சில்வேனியாவில் உள்ள இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய புலம்பெயர்வாளர்களுடன் பென்சில்வேனியா மேயர் எட்வர்ட் பிரவுன், பென்சில்வேனியா மாநில செனட்டர் டிம் கியர்னி, இந்தியாவின் பிரதி கொன்சியூலர் ஜெனரல் வருண் ஜெப் மற்றும் ஆசிய-அமெரிக்க சமூக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய அமெரிக்க சமூகத்திற்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவுகளை வளர்ப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அமெரிக்கத் தலைவர்கள் தொடர்ந்தும் அளித்துவரும் ஆதரவுக்கு இந்திய கொன்சியூலர் அலுவலகம் நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 4.4 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வாழ்வதோடு அவர்கள் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஆசிய இனக்குழுவினராகவும் விளங்குகின்றனர்.