‘எமது மக்களுக்காக அன்று யுத்தத்தில் களம் ஆடினோம். இன்று 15 வருடங்களுக்குப் பிறகு அதே மக்களுக்காக ஜனநாயக வழியில் அரசியலில் களமாட பிரவேசித்திருக்கின்றோம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்’.
இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் தவமணி தெரிவித்தார் .
காரைதீவைச் சேர்ந்த அவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அவர் “அன்று அஹிம்சை வழியில் போராடினோம். பின்பு ஆயுத வழியில் போராடினோம். இன்று அரசியல் போராட்டம் நடைபெறுகின்றது.
தென்னிலங்கையில் அன்று ஆயுதம் தாங்கிய போராட்டம் பின்பு அரசியல் போராட்டமாக மாற்றமடைந்து அதில் வெற்றி கிடைத்துள்ளது. அவரே நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.
அதேபோல் ஆயுதப் போராட்டத்தில் களமாடிய நாம், இன்று அதே மக்களுக்காக அரசியல் களம் ஆட வந்திருக்கின்றோம். எனவே எமது வெற்றி நிச்சயம்.
தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை போன்ற தாரக மந்திரங்களை எதிர்கொண்டு இந்தத் தேர்தலில் நாங்கள் இறங்கி இருக்கின்றோம். பெண்கள், சிறுவர், வயோதிபர்கள் உரிமைக்காக நாம் போராடி இருக்கின்றோம்.
வருடா வருடம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையில் மகளிருக்கு இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. வீட்டிலும் வன்முறை, நாட்டிலும் வன்முறைகள். மகளிருக்கு உரிமைகள் இல்லை. பெண்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கின்றதோ அன்றுதான் உண்மையான மகளிர் தினம்” என்று குறிப்பிட்டார்.
“நான் ஒரு போராளி. அதுதவிர ஒருமாற்றுத் திறனாளி. மாற்றுத்திறனாளிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று பல அரிசியல் கட்சிகளிடமும் கேட்டோம். ஆனால் யாரும் பொருட்படுத்தவில்லை.
விசேட தேவை உள்ளவர்கள் நிச்சயமாக அரசியல் ஈடுபட வேண்டும். நான் அதற்கு முழு உதாரணமாக இருக்கின்றேன். எனவே அம்பாறை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் என்னை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டும் .
பெண்கள் அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும். வாக்களிக்கத் தகுதி உள்ளவர்களில் 52 வீதத்தினர் பெண்களாவர். ஆனால் பெண்களுக்கு அரசியலில் சம உரிமை வழங்கப்படவில்லை. எனவே அடுத்தடுத்த தேர்தல்கள் வரவிருக்கின்றன. அதற்கு கட்டாயம் நீங்கள் கைகோர்க்க வேண்டும்.
அன்று எதையும் எதிர்பாராமல் மக்களுக்காக நாங்கள் களத்தில் போராடினோம்.
அதேபோல் இன்று அரசியலில் அதே மக்களுக்காக ஒரு அங்கீகாரத்தைக் கேட்டு நிற்கின்றோம் .
நாங்கள் மக்களுக்காக சேவை செய்வோம். அரசியல் பெண்கள் ஈடுபட வேண்டும். மக்கள் மீதும், தேசியத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெண்கள் அரசியலில் ஈடுபட முன்வராதது கவலை அளிக்கின்றது. சமூகத்துக்காக சேவை செய்யும் நான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். என்னை ஆதரித்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்.
உங்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவேன். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
ஜனநாய போராளிகள் கட்சி சார்பாக நான் போட்டியிடுகின்றேன். நம் மக்களின் நலனுக்காக களமாடிய பெண்களில் நானும் ஒருவள். அங்கவீனமான நிலையிலும் எமது தமிழ் மக்களின் நலனுக்காக இன்று தேர்தல் களத்தில் ஒரு பெண்ணாக போட்டியிடுகின்றேன். பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்க, பெண்கள் பக்கபலமாக நின்று செயற்பட வேண்டும்.
சமூகத்தின் முதுகெலும்பான பெண்கள் சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் முன்னுக்கு வர வேண்டும். ஆகவே அம்பாறை மாவட்ட தமிழ்ப் பெண்கள் ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கும் எனது இலக்கத்துக்கும் வாக்களிக்குமாறு அன்பாகச் கேட்டுக் கொள்கிறேன்.
அம்பாறை மாவட்ட தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தனித்தனியாக போட்டியிடும் கட்சிகளை இம்மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் தவமணி மேலும் தெரிவித்தார்.
காரைதீவு குறூப் நிருபர்