– அரசதுறையில் பிணக்குத் தீர்வுக்கான பொறிமுறை அறிமுகம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 06 முடிவுகள்
2025ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை Litro Gas Lanka Ltd இற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 06 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
Litro Gas Lanka Ltd இற்கு 2025ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலை முறிகோரல் முறையைக் கடைப்பிடித்து ஒருகட்ட இரட்டை கடிதவுறை முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக M/s OQ Trading Limited மற்றும் M/s Siam Gas Trading Pvt Limited ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாத்திரம் விலைமுறியினை சமர்ப்பித்துள்ளது. தொழில்நுட்பமதிப்பீட்டின் போது M/s Siam Gas Trading Pvt Limited இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமுறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக்குழுவின் விதந்துரைகளுக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளித்துள்ள விலைமனுதாரரான M/s OQ Trading Limited 2025ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி ,பொருளாதார அபிவிருத்தி ,கொள்கை வகுப்பு ,திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. இலங்கை இன்ஸ்ரிரியூட் ஒஃப் பயோடெக்னொலோஜி (பிறைவெட்) லிமிட்டட் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்
நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மத்தியமயப்படுத்தப்பட்ட உயிர்ம தொழிநுட்பப் பின்னணியை நிறுவுதல், புதிய உற்பத்தியாளர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய விதை உற்பத்தி வசதிகளை வழங்குவதன் மூலம் உயிர்மத் தொழிநுட்பத் தொழிற்றுறையை விரைவுபடுத்துவதற்கான புத்தாக்கக் கலாசாரத்தை விருத்திசெய்தல், உலகளாவிய சந்தையில் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக புதிய உயிர்ம தொழிநுட்பத் தொழிற்றுறையைமேம்படுத்தல் மற்றும் இலங்கையின் சுகாதாரத்துறைக்கு மீள்புதிப்பிக்கத்தக்க மருந்துகளை அறிமுகப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக திறைசேரியின் முழுமையான பங்குரிமையுடன் கூடியதாக தாபிக்கப்பட்ட இலங்கை இன்ஸ்ரிரியூட் ஒஃப் பயோடெக்னொலோஜி (பிறைவெட்) லிமிட்டட் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனமாகும்.
குறித்த நிறுவனம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஒஹாயோமாநிலப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலானஆய்வு மற்றும் உயர்கல்வித் துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆய்வுகள், புத்தாக்கங்கள், கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள்களுக்கான வசதிகளை மேற்கொள்கின்ற எதிர்பார்ப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக உத்தேச முறைமையில் உள்வாங்கப்பட்டுள்ள “பிராந்தியங்களுக்கிடையிலான கூட்டு” இன் கீழானவசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தோனேசியாவும் இணைந்து விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்
ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய சங்கத்திலிருந்து விலகிய பின்னர், ஐரோப்பிய சங்கத்தின் பொதுவிருப்புமுறையின் கீழ் வழங்கப்பட்டுள்ள வர்த்தக விருப்புக்களை பேணிச் செல்வதற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான உத்தேச வர்த்தகமுறை 2023 ஜீன் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இலங்கை ஐரோப்பிய சங்கத்தின் பொதுவிருப்புமுறையின் கீழ் பயனாளியாகவுள்ளமையால், ஐக்கிய இராச்சியத்தின் உத்தேச வர்த்தகமுறையின் பயனாளியாக சுயமாகவே அமைந்துள்ளது.
குறித்த உத்தேசமுறையின் கீழான அளவுகோல்களின் பிரகாரம் குறித்த விருப்புமுறையில் நன்மைகள் இலங்கையின் ஆடைக் கைத்தொழில் உற்பத்திகளுக்காகப் பெற்றுக் கொள்வதாயின் உள்நாட்டில் பின்னப்பட்ட துணிகள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி தைத்தஆடைகள் உற்பத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனாலும், உள்நாட்டில் பின்னப்பட்ட துணி உற்பத்திகள் போதியளவு இன்மையால், ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக உத்தேசமுறையில் விருப்பு நன்மைகளை உயரிய அளவில் பெற்றுக் கொள்வதற்கு எமது நாட்டின் ஆடைக்கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு இயலாமல் போயுள்ளது. ஆயினும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக உத்தேசமுறையின் அளவுகோல்களுக்கமைய, விருப்பு நன்மைகள் உரித்தான ஒரு பிராந்தியத்தின் குழுவின் நாடொன்றில் உற்பத்திசெய்யப்படும் உள்ளீடுகள்/பொருட்கள் அவ்வாறானதொரு விருப்பு நன்மைகளுக்கு உரித்தான வேறொரு பிராந்தியத்திக் குழுவிலுள்ள நாடொன்றால் உற்பத்தி செய்யப்படும் நாட்டின் முடிவுப்பொருளாகக் கருத்தில் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறித்த அளவுகோல்கள் பிராந்தியங்களுக்கிடையில் அறிமுகப்படுத்தப்படுவதுடன், அதன்மூலம் குறித்த இருநாடுகளின் ஏற்றுமதியாளர்களுக்கு நன்மைகள் உரித்தாவுதற்கான இயலுமை உண்டு. குறித்த ஏற்பாடுகளுக்கமைய, ஆசிய பிராந்தியத்தில் (பிராந்திய குழு 1) மற்றும் சார்க் வலயம் (பிராந்தியவலயம் 11) போன்ற இரண்டு வலயங்களிலும் மேற்குறிப்பிட்ட விருப்புநன்மைகள் உரித்தான இரண்டு வலயங்களாகும். அதற்கிணங்க, இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கும் ஒருங்கிணைந்த பிராந்தியங்களுக்கிடையிலான கூட்டு தொடர்பாகத் தேவையான துணி/மூலப்பொருட்கள் இந்தோனேசியாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், இலங்கையின் தைத்த ஆடைகளை ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விருப்பு நன்மைகள் இரண்டு நாடுகளுக்கும் அடைந்து கொள்வதற்காக வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழிற்றுறை மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
4. இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தென் மாகாணத்தின் ஆலோசனைகள் மற்றும் கருத்திட்ட நிலையத்தை நடாத்திச் செல்கின்ற காணி நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குதல்
இலங்கை தேயிலைஆராய்ச்சி நிறுவனம் தென் மாகாண ஆலோசனை மற்றும் கருத்திட்டநிலையம் 1961 ஆம் ஆண்டு தொடக்கம் காலி கொட்டவ பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்டதுடன், 69.63 ஏக்கர் காணியில் குறித்த நிறுவனத்தால் நடாத்திச் செல்லப்படுவதுடன்,தேயிலைப் பயிரிடலாளர்களுக்கு, தேயிலை தொழிற்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலர்களுக்கு, பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நெறிகளைப் பயில்கின்ற மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கு பார்வையிடுவதற்காக தேயிலைத் துறையில் மாதிரிகளைப் பேணிச் செல்வதற்காக இவ்வளாகம் பயன்படுத்தப்படுகின்றது.
குறித்த நிலையத்தில் மிகவும் முறைசார்ந்த வகையிலானதும் உற்பத்தித் திறனுடன் பேணிச் செல்லும் வகையில் குறித்த காணியை நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் குறித்த காணியை வழங்குவதற்காக சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீரியல் வளங்கள், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. பொலிஸ் நலன்புரி கட்டடத்தின் கேட்போர் கூடத்தின் எஞ்சிய வேலைகளை பூர்த்திசெய்தல்
பொலிஸ் நலன்புரி கட்டடத்தின் நிர்மாண ஒப்பந்தம் 98.846 மில்லியன் மொத்த செலவுமதிப்பீட்டின் கீழ் கட்டடங்கள் திணைக்களத்தின் கருத்திட்ட முகாமைத்துவத்தின் கீழ் துணை ஒப்பந்தமாக இன்வெஸ்ட் இன்ஜினியரிங் அன்ட் கன்ஸ்டரக்சன் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தால் ஆர்ச் இன்டர்நெஷனல் தனியார் கம்பனியின் ஆலோசனை சேவை வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு இன்வெஸ்ட் இன்ஜினியரிங் அன்ட் கன்ஸ்டரக்ஷன் நிறுவனம் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையால் கட்டடங்கள் திணைக்களத்தால் குறித்த கருத்திட்டம் 2023.02.24 அன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் எஞ்சிய வேகைளை பூர்த்தி செய்வதற்காக சமகால விலைகளுக்கமைய ஆலோசனை சேவை நிறுவனத்தால் 122.921 மில்லியன் ரூபாய்களாக திருத்தப்பட்டு மொத்தச் செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்ததிருத்தப்பட்ட மொத்தச் செலவு மதிப்பீடின் கீழ் கருத்திட்டத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகளை கட்டடங்கள் திணைக்களத்தின் ஆரம்ப திட்டத்திற்கமைவாக பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. அரசதுறையில் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குத் தீர்வுக்கான பொறிமுறையை அறிமுகப்படுத்தல்
அரசதுறையில் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குத் தீர்வுக்கான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக 2023.11.20 அன்று இடம்பெற்றஅமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை ஒட்டுமொத்த அரசசேவையில் அமுல்படுத்துவதற்காக பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 05ஃ2024 வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழிநுட்ப மற்றும் விசேட நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த பொறிமுறையை அமுல்படுத்துவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியத்தின் கருத்திட்டத்திற்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய,“இலங்கையில் சமாதானம் மற்றும் பிணக்குகளைத் தடுப்பதற்கான சமூக உரையாடல்”எனும் பெயரிலான புதிய கருத்திட்டத்தின் கீழ் “அரசசேவையில் சமூக உரையாடல்”மற்றும் “தனியார் மற்றும் முறைசாராப் பொருளாதாரத் துறை இரண்டிலும் சமூக உரையாடல் மேம்பாட்டு வேலைத்திட்டம்”எனும் வேலைத்திட்டங்கள் இரண்டுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை நீதி, பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரின் தலைமையிலான குழுவொன்றின் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு 2024 – 2026 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் குறிப்பிட்டு நீதி, பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.