ஈரான் மீது தாக்குதலை நடாத்தி பிராந்தியத்தில் போர் சூழலை அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேல், காசா மற்றும் லெபனானில் நேற்று சரமாரி தாக்குதல்களைத் தொடர்ந்தது. மறுபுறம் இஸ்ரேலில் இராணுவத் தளம் ஒன்றுக்கு அருகில் டிரக் வண்டி ஒன்றை மோதவிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் ஒன்றில் பலர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் நேற்று இடம்பெற்ற பயங்கர வான் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 20 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜபலியா அகதி முகாமில் உள்ள அல் பகூரா பாடசாலைக்கு அருகில் இருக்கும் குடியிருப்புத் தொகுதி ஒன்றின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். வடக்கு காசாவில் இஸ்ரேலின் முற்றுகை 23 ஆவது நாளாக நீடித்த நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இங்கு வீதிகள் முடக்கப்பட்டு, உதவி விநியோகங்கள் தடுக்கப்பட்டு, வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடக்கு காசாவில் இஸ்ரேலின் முற்றுகை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி இருப்பதோடு கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் பெயித் லஹியா உட்பட பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. காசாவின் வட பகுதி பேரழிவு அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சுகாதார நிலையங்கள் மீதும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.
மறுபுறம் “எமது கண்முன்னே இனப்படுகொலை ஒன்றுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் காசாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் உயிரிழக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக” ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளுக்கான ஐ.நா. விசேட அறிக்கையாளர் எச்சரித்துள்ளார். காசாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதேநேரம் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் புதிய தாக்குதல்களை நடத்தியதோடு குடியிருப்பாளர்கள் பலரை தமது வீடுகளை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது.
தெற்கு நகரங்களான டைரே மற்றும் நபடியாவிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசியதாக லெபனான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
லெபனானில் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி மோதல் தீவிரமடைந்தது தொடக்கம் 1,615 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தரைப்படை ஹிஸ்புல்லா போராளிகளுடன் சண்டையிட்டு வரும் நிலையில் மேலும் நான்கு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி இஸ்ரேலிய தரைப்படை தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு ஈரானியப் படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே இஸ்ரேலின் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இதற்கு பதிலடி கொடுப்பது ‘கடமை’ என்று ஈரான் கூறியபோதும், காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தம் ஒன்றுக்கே முன்னுரிமை அளிப்பதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் துல்லியமானது மற்றும் சக்தி வாய்ந்தது என்றும் அதன் நோக்கங்கள் அனைத்தும் எட்டப்பட்டது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஈரானின் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ வசதிகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் முழு அளவில் போர் ஒன்று வெடிப்பதில் இருந்து பின்வாங்கும்படி உலக வல்லரசுகள் ஈரான் மற்றும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.
இத்தாக்குதலை குறைத்து மதிப்பிட்டிருக்கும் ஈரான் ஒருசில ராடார் அமைப்புகள் மாத்திரமே சேதமடைந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானிய உயர்மட்ட தலைவர் ஆயதொல்லா அலி காமனெய் சமூக ஊடகத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “இத்தாக்குதலை மிகைப்படுத்தவோ குறைத்துக்கூறவோ கூடாது” என்று குறிப்பிட்டார்.
“ஈரானிய தேசம் மற்றும் இளைஞர்களின் பலம், நோக்கம் மற்றும் முயற்சியை இஸ்ரேலுக்கு புரிய வைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பஸ் தரிப்பிடம் ஒன்றின் மீது நேற்று டிரக் வண்டி ஒன்றை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் 40 பேர் காயமடைந்திருப்பதோடு அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவ முகம் ஒன்றுக்கு அருகில் இருக்கும் பஸ் தரிப்பிடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது டிரக் வண்டிக்குக் கீழ் பலரும் சிக்கியுள்ளனர். டிரக் வண்டியை செலுத்தியவரை ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய சிவிலியன் ஒருவர் சுட்டுக் கொன்றிருப்பதாக இஸ்ரேலிய பொலிஸாரை மேற்கோள்காட்டி ஜெரூசலம் போஸ்ட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த சாரதி ஒரு பலஸ்தீனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.