எவனொருவன் உகந்த செயல்களை செய்கிறானோ, கடவுளின் நோக்கத்திற்கிணங்க வாழ்க்கை நடத்துகிறானோ, அவனுக்குத் தான் தெய்வ கடாக்ஷம் கிட்டும். தூங்கிக் கொண்டு பொழுதை போக்கும் சோம்பேறிகளை தெய்வமும் வெறுக்கும். மனிதன் தெய்வ சக்திகள் அனைத்தும் பெற்றிட விரும்ப வேண்டும் என்று கடவுள் நினைக்கிறார். தெய்வ நம்பிக்கை இழந்தவனுக்காக இந்த உலகம் இயங்கவில்லை.
அசுர எண்ணம் கொண்ட அவர்களை இந்த பூமித்தாய் தன் மடியில் தாங்கிக் கொண்டுள்ளார். அவர்கள் வெளியேறும் காலம் வந்து விடும். அப்படி அவர்களை இயற்கை வெளியேற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை. அனலிடைப்பட்டவர்கள் போல் அவர்கள் துடிப்பது உறுதி. மயக்கம், பிரமை, சோம்பேறித்தனம் அறியாமை ஆகியவைகளை கைவிட்டு, விழிப்புணர்வை வரவழைத்துக் கொள்ளுங்கள். புனிதமான வெளிச்சத்தை நோக்கி முன்னேறுங்கள். அதன் மூலம் மனிதர்களாகிய நமக்கு சித்தி கிடைக்கும். மேலும் ஆன்ம லாபமும் உண்டாகும்.
இந்த தெய்வீக விழிப்புணர்வு எங்ஙனம் அமையும்? முதலில் நாம் நம் இயல்புகளை ஏற்றுக் கொள்வோம். நம்மை அந்த பரமபிதா, பரமாத்மாவின் மைந்தர்கள், அவரின் பிரதிநிதிகள் என அனுபவ பூர்வமாக உணர்வோம். நம்மிடமுள்ள தீயகுணங்கள் அனைத்தையும் தூக்கி எறிவோம். தீயகுணங்கள் அகன்றதும் நம் உள்ளத்தில் தெய்வீக தீப ஒளி பிரகாசித்து சுடர்விடும். உலகமே ஒளியமாக விளங்கும். தாம் எங்கும் பரவி அழகுற விளங்குகிறோம் என்ற உணர்வு மேம்படும். நாலாபுறமும் ஆனந்தம் சூழும். அமரத் தன்மை பெறும். வாழ்க்கை தெய்வீகத்தை நோக்கி முன்னேறும். கடவுள் படைப்பில் மனிதனை விட சிறந்த படைப்பு ஏதுமில்லை.
மனித ஆற்றல்களில் எண்ணத்தின் ஆற்றலுக்கு மிகுந்த வலிமையுண்டு. எண்ணத்தின் ஆற்றல் பெற்ற ஒருவன் லட்சக் கணக்கான மனிதர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்த முடியும். எண்ணத்தின் ஆற்றல் கொண்ட ஒருவன். எவ்வித பயன்பாட்டு சாதனங்கள் இல்லாமலும் அவனால் முன்னேற்றக்கூடிய பாதையினை உருவாக்க முடியும், எண்ண ஆற்றலின் மூலமே பல மாமனிதர்கள் சமூகத்தையும் தேசத்தையும் நிர்மாணித்தனர். எண்ண -ஆற்றல் கொண்டவனே வாழ்க்கை பந்தங்களிலிருந்து விடுபட்டு ஆன்மீகவாதியாக வலம் வர முடியும். எண்ணத்தின் ஆற்றலின் மூலம் தான் மகான்கள் பரமாத்வை உணர்ந்துள்ளனர்.
மனிதனின் வாழ்வை உருவாக்குவதற்கான வசதி செய்வதிலும் உருக்குலைய வைப்பதிலும் அவனது எண்ண ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித வாழ்வு எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைகிறது. கெட்ட எண்ணங்களைக் கொண்டு ஒருவன் தன் வாழ்வை முன்னேற்றிக் கொள்ள முடியாது. அவர்கள் வெற்றி பெறுவது போல் காணப்பட்டாலும் வீழ்ச்சி அடைந்தே தீருவர்.