பிள்ளையார் இரத்தினாசனத்தில் எழுந்தருளியிருந்த பொழுது, சமீபத்தில் இருந்த சமணர்கள் பொறாமை கொண்டு, தங்கள் உள்ளத்திலுள்ள அச்சத்தை மறைத்து, கோபாக்கினி சொலிக்கக் கண்கள் சிவந்து, பாலசூரியனைச் சூழ்கின்ற கருமுகிற் குழாங்கள் போலப் பிள்ளையாரைச் சூழ்ந்து, அவரை வாதினால் வெல்லக் கருதி, தங்கள் சமய நூல்களை எடுத்துச் சொல்லிக் குரைத்தார்கள். பிள்ளையார் அதைக்கேட்டு, “உங்கள் சமய நூற்றுணிவை உள்ளபடி கிரமமாக பேசுங்கள்” என்று சொல்லியருள; சமணர்கள் துள்ளி எழுந்து, அநேகர்களாய்ச் சூழ்ந்து, பதறிக் கதறினார்கள். பாண்டிமாதேவியார் அதுகண்டு பொறாராகி, மனநடுங்கி, பாண்டியனை நோக்கி, “சுவாமிகள் சிறுபாலர். இச்சமணர்களோ எண்ணில்லா தவர்கள். என்பிராணநாயகரே! எம்பெருமானார் உம்முடைய நோயை நீக்கியருளுக. பின்பு இச்சமணர்கள் பேசவல்லவராயிற் பேசக்கடவர்கள்” என்றார். பாண்டியன் தேவியாரை நோக்கி, “நீ வருந்தாதே” என்று சொல்லி, சமணர்களை நோக்கி, “நீங்களும் இந்தச் சிவபக்தரும் உங்களுங்கள் தெய்வத்தன்மையை என்னுடைய வெப்புநோயை நீங்குதலினாலே தெரிவியுங்கள்” என்றான். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிமாதேவியாரை நோக்கி, “மாதேவியே, என்னை நீ பாலன் என்று அஞ்சவேண்டாம். திருவாலவாயான் நிற்க, நான் சமணர்களுக்கு எளியேனல்லேன்” என்னுங் கருத்தினையுடைய “மானி னேர்விழி மாதராய்” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அது கேட்ட அரசன் பிள்ளையாரையும் குரைத்தல் ஒழியாத சமணர்களையும் நோக்கி, “நீங்கள் என்னுடைய நோயை இகலித்தீருங்கள். தீர்த்தவர் எவரோ அவரே வாதில் வென்றவர்” என்று சொல்ல; சமணர்கள் “மகாராஜாவே! உம்முடைய இடப்பாகத்து நோயை நாங்கள் எங்கள் சமய மந்திரத்தினாலே தீர்ப்போம். அவர் வலப்பாகத்து நோயை தீர்க்கக்கடவர்” என்று சொல்லி, அரசனுடைய இடப்பாகத்தைப் பீலியினாலே தடவினார்கள். அதினாலே வெப்பு நோய் வளர, பாண்டியன் அதைப் பொறுக்கலாற்றாதவனாகி, பிள்ளையாரைப் பார்த்தான். பிள்ளையார் அரசனுடைய நோக்கத்தைக் கண்டு, “மந்திரமாவது நீறு” என்னுந் திருநீற்றுப் பதிகத்தைப் பாடி. அவனுடைய வலப்பாகத்தை விபூதி கொண்டு, திருக்கையினாலே தடவியருள; அவ்வலப்பாகம் வெப்புநோய் நீங்கிப் பொய்கை போலக் குளிர்ந்தது. இடப்பாகத்து வெப்புநோய் முன்னையிலும் இருமடங்காய் மிகுந்து பொங்க, சமணர்கள் மனநடுங்குற்று, மயிற்பீலி தீய, அவ்வெப்புத்தீ தம்மேலும் தாவ, சரீரமுங்கன்றி, செருக்கு அழிந்து, அருகுவிட்டுத் தூரத்திலே நின்றார்கள்.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு