Sunday, November 24, 2024
Home » தவறி வீழ்ந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண்

தவறி வீழ்ந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண்

by Prashahini
October 28, 2024 4:14 pm 0 comment

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்றவேளை கல் இடுக்கு ஒன்றினுள் வீழ்ந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார்.

மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார்.

அவரை சுமார் 7 மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவினர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

500 கிலோ எடையுள்ள பாறையை வெளியே எடுத்த போதிலும், அப்பெண் சிக்கியிருந்த “எஸ்” வடிவிலான வளைவிலிருந்து அவரை மீட்க மேலும் பல பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

“மீட்புப்பணி வைத்திய உதவியாளராக என்னுடைய 10 ஆண்டுகால பணி வாழ்க்கையில், இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை. இப்பணி சவாலான, ஆனால் மனநிறைவு தருகிற பணியாக இருந்தது,” என நியூ சௌத் வேல்ஸ் அம்பியூலன்ஸ் சேவையின் வைத்திய உதவியாளர் பீட்டர் வாட்ஸ் தெரிவித்தார். அச்சேவையின் சமூக ஊடக பக்கங்களில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பெண் தலைகீழாக இருந்துள்ளார். அவரை மீட்பதற்கு அவரின் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பின்னர் நம்ப முடியாத வகையில், அப்பெண் லேசான கீறல்கள் மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ அம்பியூலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் “என்னை காப்பாற்றிய குழுவினருக்கு நன்றி, அவர்கள் உண்மையிலேயே உயிர் காப்பாளர்கள்,ஆனால், என்னுடைய செல்போனை மீட்க முடியாதது துரதிஷ்டவசமானது” என இணையம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT