ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு மாதம் கடந்து இரண்டு நாட்களாகியுள்ளது. இதற்கிடையில் சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பல்வேறு விதமான விமர்சனங்ளை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, ‘மக்களின் வாழ்வாதார செலவைக் குறைத்து நிவாரணம் வழங்குவதாகவும் வற் வரியையும் குறைப்பதாகவும் ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமர்சனமும் குற்றச்சாட்டும் ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பை ஏற்று சில வாரங்கள் கடந்த நிலையில் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்னும் புதிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை. புதிய பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
அதற்கிடையில் இத்தகைய குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் முன்வைத்திருக்கிறார்.
உணவு, கல்வி, மற்றும் மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை குறைப்பதாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் அறிவிக்கப்பட்டது. அத்தகைய வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு வழங்கி இருப்பதை தேசிய மக்கள் சக்தி மறுக்கவில்லை.
ஆனால் வரிகளை ஜனாதிபதியால் நேரடியாகக் குறைக்க முடியாது. அதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. அதனால் பாராளுமன்றத்தின் ஊடாகவே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமால் ரட்நாயக்க கடந்த வார இறுதியில் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில், ‘தற்போதைய பொதுத்தேர்தலின் ஊடாக புதிய பாராளுமன்றம் அமைந்ததும் உணவு, கல்வி மற்றும் மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை சட்டமொன்றை நிறைவேற்றி குறைக்க உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வற் வரியை பாராளுமன்றத்தின் ஊடாகவே குறைக்க முடியும் என்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில் முன்னாள் அமைச்சர் ராஜிதவின் விமர்சனம், ஜனாதிபதி பாராளுமன்ற அதிகாரத்தை கையில் எடுக்குமாறு வலியுறுத்துவது போன்றுள்ளது.
பல தசாப்த காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித, பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் அதிகாரங்கள் குறித்து தெரியாதவர் அல்லர். அதனால் இத்தகைய குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கில் முன்வைத்திருக்கிறாரா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து அற்ப அரசியல் இலாபம் பெலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இவர்களது அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளுக்கு இனியும் நாட்டு மக்கள் துணைபோவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதுவே அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
ராஜிதவின் குற்றச்சாட்டுப்படி பாராளுமன்றத்தினால் ஆற்றப்பட வேண்டிய காரியத்தை ஜனாதிபதி ஆற்ற வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கோரிக்கை ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது. இது மறுக்க முடியாத உண்மையும்.
அதேநேரம் இது பொதுத்தேர்தல் காலம். இச்சந்தப்பத்தைப் பயன்படுத்தி பொருத்தமற்ற விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் மக்கள் முன்பாக வைக்கலாகாது. அதன் ஊடாக மக்களை பிழையாக வழிநடத்தலாம் என எதிர்பார்க்கவும் கூடாது. அதன் ஊடாக மக்கள்தான் பாதிப்புக்களுக்கு முகம்கொடுப்பர் என்பதையும் மறந்து விடலாகாது.
ஆனாலும் இத்தகைய குற்றச்சாட்டுக்களினதும் விமர்சனங்களினதும் நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் மக்கள் அறியாதவர்கள் அல்லர். அதனால் இவர்களது முயற்சி நிச்சயம் விழலுக்கிறைத்த நீராகவே அமையும். அதற்கான சந்தர்ப்பத்தையே மக்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். கடந்த காலங்களைப் போன்று இனியும் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நல்ல எடுத்துக்காட்டாகும்.
ஆகவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். அதுவே மக்களின் உண்மையான எதிர்பார்ப்பாகும்.