– 1997 இலக்கத்திற்கு அறிவிக்கவும்: பொலிஸ்
பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து குறித்த தகவல் கிடைத்துள்ளதால், மறு அறிவித்தல் வரை தமது தூதரக பணியாளர்கள் மற்றும் அமெரிக்க சுற்றுலா பிரயாணிகள் அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகள் தொடர்பில் 119 இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு தூதரகம் தமது பிரஜைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பிற்கமைய, பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் புலனாய்வு திணைக்களங்கள் எடுத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஏதேனும் அவசர நிலைமை அல்லது தகவல்களை வழங்க 1997 இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொத்துவில், அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பாக இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் அதில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதூடு, அவர்களை இலக்கு வைத்து மற்றுமொரு நாட்டிலிருந்து வந்துள்ள சிலர் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.