– சில உயர் பதவிகளுக்கான அதிகாரிகள் நியமனம்
– இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி CHOGM செல்ல அதிகாரிகள் குழு
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் வரையறையை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 14 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளுக்கு பணத்தை வழங்குவதற்காக சுற்றிவளைப்பு முற்பண கணக்கு பேணப்படுகிறது. குறித்த முற்பணக் கணக்கின் உச்ச செலவு வரையறை ரூ.50 மில்லியன் ஆகும். இலஞ்சமாக வழங்கப்படும் தொகையை நிச்சயித்து தீர்மானிக்க முடியாது என்பதனாலும், தற்போது கிடைக்கும் இலஞ்ச முறைப்பாடுகளின் தன்மைக்கு ஏற்பவும் இலஞ்சமாக கோரப்படும் தொகை மிகவும் உயர்வான பெறுமானத்தில் இருப்பதனால் குறித்த உச்ச செலவு வரையறையை விரைவாக திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்கமைய, இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் உச்ச செலவு வரையறையை ரூ.150 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
02. பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு – (CHOGM)
பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு 2024 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை சமோவா அபியா (Samoa Apiya) இல் “சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்ளச் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மகாநாயக்க தேரர்களின் தங்குமிட ஆச்சிரமத்தின் புனரமைப்புப் பணிகள்
பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு சொந்தமான கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தங்குமிட ஆச்சிரமத்தின் கட்டிடமானது மகாநாயக்க தேரர்கள் கொழும்புக்கு வருகைதரும் போது தங்குமிட வசதிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவ் ஆச்சிரமத்தின் பொது வசதிகள் போதியளவு இன்மையால் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் புனரமைப்புப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் சந்தை விலை அதிகரிப்பு மற்றும் மேலதிகமாக அடையாளங் காணப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஆரம்ப மதிப்பீட்டுச் செலவைத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த மறுசீரமைப்புப் பணிகளுக்கான மதிப்பீட்டை 86.97 மில்லியன்களாகத் திருத்தம் செய்வதற்கும், 2024ஆம் ஆண்டுக்குத் தேவையான மேலதிக 31.86 மில்லியன் நிதியை பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் காணப்படும் பழைய இரும்புகளை வெளியகற்றல்
இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையில் ஆண்டுதோறும் பழைய இரும்புகள் அதிகளவில் திரள்கின்றதுடன், தற்போது திரண்டுள்ள பழைய இரும்புத் தொகையை சர்வதேச போட்டி விலைமுறி கோரல் முறைமையைப் பின்பற்றி வெளியகற்றுவதற்காக 2024.06.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும்,உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மூலப்பொருள் பற்றாக்குறைக்கு தீர்வாக அவர்களுக்கும் போட்டி விலைமுறியை சமர்ப்பித்து விலைமனுக்களைச் சமர்ப்பித்து பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் தேசிய போட்டி விலைமுறி கோரல் முறையைப் பின்பற்றுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை விசேட கருத்திட்டமாக பிரகடனப்படுத்தல்
இலங்கை துறைமுக அதிகாரசபையால் கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுக அதிகாரசபைக்கு முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக இயக்குவதற்கு 2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் தற்போதுவழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த கொள்கலன் முனையத்திற்குத் தேவையான பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் தனியார் கொள்கலன் இயக்குபவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டு சபைச் சட்டத்தின் கீழ் காணப்படும் பல்வேறுபட்ட வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை “விசேட கருத்திட்டமாக” நிதி விடயதான அமைச்சரால் வெளியிடுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. தொழிற்படுத்தல் பாதிப்புக்களற்ற விமானப் போக்குவரத்து தகுதியை தொடர்ச்சியாக பேணிச் செல்வதற்கான ஒத்துழைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்
சர்வதேச விமான சேவைகள் நிறுவனத்தின் நிதியனுசரணையின் கீழ் பங்களாதேசம், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் “தொழிற்படுத்தல் பாதிப்புக்களற்ற விமானப் போக்குவரத்து தகுதியை தொடர்ச்சியாக பேணிச் செல்வதற்கான ஒத்துழைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்- தெற்காசியா” 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகள் குறித்த வேலைத்திட்டத்திற்காக வருடாந்தம் செலவுகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியதுடன், தற்போது இலங்கை கட்டம் V வரை பங்களிப்புத் தொகையை செலுத்தியுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கட்டம் VI இன் கீழ் 08 நோக்கங்களை அடைவதற்காக 05 வருடங்களுக்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் அடுத்த 05 ஆண்டுகளுக்கு 95,848 அமெரிக்க டொலர்கள் வீதம் வருடாந்தம் செலுத்துவதற்கும், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்திற்கு குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. இலங்கை பொலிஸிற்கு சொந்தமான மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்தல்
இலங்கை பொலிஸ் தொடர்பாடல் வலையமைப்பைப் பேணிச் செல்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா போன்ற தொலைத்தொடர்புக் கோபுரங்கள் துரிதமாகத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2024-2026 நடுத்தரக் கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் தேவையான நிதியை ஒதுக்கி குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்காக ஆலோசனைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும் குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை திறந்த போட்டி விலைமுறிக் கோரல் முறைமையைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. அம்பாறை எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதி (தும்பர வனவிடுதி) புனரமைத்தல்
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உயரிய பயனைப் பெறும் வகையில் பொருத்தமான பொறிமுறையை விதந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் நவீனமயப்படுத்த வேண்டிய 09 விடுதிகள் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் அடையாளங் காணப்பட்டுள்ளன.
அதற்காக ரூ.166.93 மில்லியன் மதிப்பீட்டுத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளதுடன், குறித்த கருத்திட்டத்தை இவ்வாண்டிலேயே பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதற்கிணங்க, எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதிகளை நவீனமயப்படுத்துவதற்கான பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் மத்திய பொறியியல் சேவைகள் தனியார் கம்பனிகள் மூலம் பூர்த்தி செய்வதற்காக சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய றியர் அட்மிரால் திரு. பீ.விதான அவர்கள் 55 வயது பூர்த்தியடைந்தமையால் 2024.09.13 ஆம் திகதியன்று ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தற்போது கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் றியர் அட்மிரால் வை.ஆர்.சேரசிங்க அவர்களை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகளை நியமித்தல்
நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ்வரும் நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தற்போது திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர உத்தியோகத்தரான எச்.சீ.டீ.எல்.சில்வாவை திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமித்தல்
• தற்போது பிரதிச் செயலாளராகக் கடமையாற்றும் ஆர்.எம்.பீ.ரத்னாயக்க 2024.11.06 அன்று ஓய்வு பெற்ற பின்னரான வெற்றிடத்திற்கு தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான டீ.ஏ.பீ.அபேசேகரவை நியமித்தல்
• எச்.சீ.டீ.எல்.சில்வா திறைசேரி பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டமையால் வெற்றிடமான திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது அரச நிதித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர அதிகாரியான .ஏ.என்.ஹபுகலவை நியமித்தல்
• தற்போது கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் பதில் கடமையிலுள்ள பணிப்பாளர் நாயகமாகக் கடiயாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான என்.எஸ்.எம்.பீ.ரஞ்சித்தை குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமித்தல்
• தற்போது வெற்றிடமாகவுள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. ஜே.எம்.எஸ்.டீ.ரத்னாயக்கவை நியமித்தல்
11. மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு கலாநிதி ரீ.எம்.ஜே.நிலான் குரேவை நியமித்தல்
மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய பேராசிரியர் காமினி ரணசிங்கவை பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளமையால், குறித்த பதவி வெற்றிடம் நிலவுகின்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொல்லியல், சோதிடவியல், தொல்லியல் பாதுகாப்புத் துறைகளில் பயிற்சி பெற்றுள்ளவரும், அனுபவங்களுடன் கூடிய, வெளியீட்டுக் கருத்திட்டங்கள் மற்றும் கல்விசார் ஆய்வுகள் பலவற்றுக்கு தலைமைத்துவம் வகித்து வழிகாட்டல்களை வழங்கியுள்ள கலாநிதி ரீ.எம்.ஜே.நிலான் குரே குறித்த பதவிக்கு தகைமையுடையவரென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அவரை மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாக ஒப்பந்த அடிப்பமையில் நியமிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்தல்
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, குறித்த ஆணைக்குழுவானது 08 உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். குறித்த சட்டத்தின் 3(1)(அ) பிரிவுக்கமைய அவர்களில் மூன்று பேர் போக்குவரத்து, கொள்ளைத் திட்டமிடல் மற்றும் நிதி போன்ற விடயதான அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவர். குறித்த சட்டத்தின் 3(1)(ஆ) பிரிவின் குறிகாட்டிகளுக்கமைய, அமைச்சரவை அங்கீகாரத்துடன் போக்குவரத்து விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியதுடன், அவர்களுடைய பதவிக்காலம் 03 ஆண்டுகளாகும். 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, ஆணைக்குழு உறுப்பினர்கள் விடயதான அமைச்சரால் நியமிக்கப்பட வேண்டும்.
அதற்கிணங்க, 3(1)(ஆ) பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, கீழ்க்காணும் நான்கு பேரை நியமிப்பதற்கும், அவர்களில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளராக கலாநிதி. பந்துர திலீப விதாரணவை நியமிப்பதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கலாநிதி. பந்துர திலீப விதாரண – இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
• டப்ளிவ்.ரவி பிரசாத் டி மெல் – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
• கலாநிதி நாமலி தரங்கா சிரிசோம – ஸ்ரீமத் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
• ஏ.ஐ.யூ. பெரேரா – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர்
13. இலங்கை – பாகிஸ்தான் இராஜதந்திரத் தொடர்புகளை கொண்டாடுமுகமாக நினைவு முத்திரை வெளியிடல்
2022 ஆம் ஆண்டாகும் போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திரத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 02 நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்;தான் அஞ்சல் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கும் பாரிய அளவான கருத்திட்டங்களுக்கான சிறிய செலவுகளுக்கான நிதியிடல் வசதிகள் ஊடாக நிதி பெறுதல்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழமைவை கவனத்தில் கொண்டு மொரகொல்ல நீர் மின்சார கருத்திட்ட நிர்மாண வேலைகளை நிறைவு செய்தல், பிந்திய நிர்மாண செயற்பாடுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி குறிக்கோளாக கொண்ட இணையான கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்களிலிருந்து (நிலையான) 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேற்குறித்த கடன் தொகையை திறைசேரி பிணைமுறியின் கீழ் 02 தடவைகளில் நேரடியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.