Sunday, November 24, 2024
Home » இந்திய கடற்படை கப்பல் கல்பேனி கொழும்பு விஜயம்

இந்திய கடற்படை கப்பல் கல்பேனி கொழும்பு விஜயம்

by Rizwan Segu Mohideen
October 20, 2024 8:16 am 0 comment

இந்திய கடற்படையின் கப்பலான INS Kalpeni நேற் (19) கொழும்பை வந்தடைந்தது.

கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர். இக்கப்பல் தங்கியிருக்கும் காலத்தில் கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் சுனில் குல்ஹாரி, இலங்கையின் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்திக்கவுள்ளார்.

INS Kalpeni இந்திய கடற்படையின் Car Nicobar வகை Waterjet FAC வகையைச் சேர்ந்ததாகும். இது 2010 ஒக்டோபர் 14 ஆம் திகதி அதன் பயணத்தை ஆரம்பித்தது. இந்த கப்பலுக்கு லட்சத்தீவுகள் குழுவில் உள்ள கல்பேனி தீவின் பெயரிடப்பட்டுள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் முதன்மைப் பணியைக் கொண்ட இந்தக் கப்பல் கொச்சியில் தளத்தைக் கொண்டுள்ளது. கடத்தலைத் தடுத்தல், தேடுதல், பறிமுதல் , மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றதாகும்.

இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பதற்காக, அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவு கருவிகளை இக்கப்பல் கொண்டு வந்துள்ளது. இக்கப்பலின் பணியாளர்கள் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான இடங்களை பார்வையிடவுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற வகைக் கப்பலான INS Kabra, கடந்த 2024 ஜனவரியில் கொழும்புக்கு விஜயம் செய்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையிடம் உதிரிப்பாகங்களை ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகைகள் இரு அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தொடர்புகளை பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கை மற்றும் “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை” குறிக்கும் ‘சாகர்’ எனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தூரநோக்கிற்கு இணங்க இரு தரப்பு ஒத்துழைப்பையும் நட்புறவையும் இந்தக் கப்பலின் பயணம் மேலும் வலுவூட்டுமென இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT