இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உஷ்பெகிஸ்தானும் துர்க்மெனிஸ்தானும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
சர்வதேச வடக்கு- தெற்கு போக்குவரத்து வழித்தட அமைப்பில் இணையவும் ஈரானின் சஹ்பார் துறைமுகத்தின் ஊடாக இந்து சமுத்திர நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இரண்டு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
இவ்வழித்தடமானது கடல், ரயில் மற்றும் நெடுஞ்சாலை வழித்தடங்களை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட வலையமைப்பாகும். இது ஐரோப்பா, ரஷ்யா, மத்திய ஆசியா, வளைகுடா பகுதி மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளை விரைவாக இணைக்கக் கூடியதாக உள்ளதெனக் குறிப்பிட்டுள்ள மத்திய ஆசியக் குடியரவு அதிகாரிகள், ஏனைய வழித்தடங்களை விடவும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இது செலவு குறைந்த வழித்தடமாக விளங்குவதாகவும் கூறியுள்ளனர். அத்தோடு மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை மத்திய ஆசிய நாடுகளுக்கு வழங்கக்கூடியதாக விளங்கும் இவ்வழித்தடம் பிராந்தியத்தை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கவும் அதன் முக்கிய சக்தி வளங்களை ஏற்றுமதி செய்யவும் உதவக்கூடியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.