– பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டி
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று (17) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நிதி அதிகாரத்தை வைத்திருக்கும் பாராளுமன்றம் வலுவாக இருக்க அந்த குழு வெற்றி பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.