இந்தியக் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறன்களை 80 ஆயிரம் கோடி ரூபா செலவில் மேம்படுத்துவதற்கு பாதுகாப்பு தொடர்பான இந்திய மத்திய அமைச்சரவைக் குழு அங்கீகாரம் அளித்திருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட உள்ளதோடு, அமெரிக்காவிடமிருந்து 31 பிரிடேட்டர் ட்ரோன்கள் கொள்வனவு செய்யப்படவும் இருக்கிறது.
இதன் நிமித்தம் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன் பயனாக இந்திய கடற்படை அணுசக்தி
சக்தியில் இயங்கும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவில் பெற்றுக்கொள்ளும். இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியக் கடற்படையினரின் திறன்களை மேலும் மேம்படுத்த வழிவகுக்கும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஏ.என்.ஐ. யிடம் மேலும் கூறுகையில், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் மையத்தில் இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்படும். அதன் நிமித்தம் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தத்திற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீருக்கடியிலான இந்திய கடற்படையினரின் திறன்களை மேம்படுத்த இது பெரிதும் உதவும்.
அதேவேளை, இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலான வெளிநாட்டு இராணுவ தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கன் ஜெனரல் ஒட்டோமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 31 பிரிடேட்டர் ட்ரோன்களும் கொள்வனவு செய்யப்படவிருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் அடுத்துவரும் சில நாட்களில் கைச்சார்த்திடப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.