தற்போது இடம்பெற்று வரும் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது.
‘குரூப் – A’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 54 ஓட்டங்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் 2016 இற்கு பிறகு முதல் முறையாக நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
அதே பிரிவில் இருந்த இந்திய அணி வெளியேறி உள்ளது.
நேற்று (14) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சுமார் 8 பிடி வாய்ப்புகளை நழுவவிட்டது.
111 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. நியூஸிலாந்து அணியின் அமெலியா கெர் (3 விக்கெட்டுகள்), எடன் கார்சன் (2 விக்கெட்டுகள்) ஆகியோர் அற்புதமாக பந்து வீசி பாகிஸ்தானை வீழ்த்தினர். அதன் மூலம் துடுப்பாட்டத்தில் சொதப்பி இருந்தாலும் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறந்து விளங்கியது.
இந்தியா வெளியேற்றம்: ‘குரூப் – A’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 4 லீக் ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்திய இந்தியா, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி உள்ளது. கடந்த 2020இல் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
இலங்கை வெளியேற்றம்: கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற T20 மகளிர் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி நியுஸிலாந்திடம் தோல்வியடைந்தது.
போட்டியில், இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றது.
குறித்த இலக்கை 17.3 ஓவர்களில் நிறைவு செய்து நியுஸிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்றது. குறித்த தொடரில் இலங்கை மகளிர் அணி பங்கேற்ற 4 லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இதனால் தொடரிலிருந்து ஏற்கனவே இலங்கை அணி வெளியேறியுள்ள நிலையில், உலக கிண்ண கனவு தகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.