Sunday, November 24, 2024
Home » மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

- ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், டீசலுக்கு ரூ. 25 கொடுப்பனவு

by Prashahini
October 15, 2024 12:59 pm 0 comment

– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்
பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

எரிபொருள் விலை மிகவும் பெருமளவில் அதிகரித்தமை காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்துக்கு தீர்வு வழங்குவதற்கு 2024.08.21 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தீர்மானம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. எனவே, மீனவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டு 2024.10.01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு பின்வரும் நிவாரணங்களை வழங்குவதற்காக விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 எரிபொருளாக டீசல் பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ. 25 பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு ரூ. 300,000 வரையான உச்ச எல்லைக்குள் “மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான கொடுப்பனவு” வழங்குதல்.
 எரிபொருளாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் 15 லீற்றர் மண்ணெண்ணைக்கு ரூ.25 பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்தில் ஆகக்கூடியது 25 நாட்கள் என்ற அடிப்படையில், தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் ரூ.25 “மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான கொடுப்பனவு” வழங்குதல்.
 டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டீசலுக்கான உச்ச நிவாரண விலை ரூ. 250 மட்டத்திலும், மண்ணெண்ணெய் உச்ச விலை ரூ.150 மட்டத்திலும் ஆகக்கூடியது 06 மாத காலம் வரை டீசலுக்காக ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 7.5% நிவாரணமும், மண்ணெண்ணைக்கு ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 12.5% நிவாரணமும் மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துதல்.

02. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணித்துண்டை உத்தேச ஏக்கல உப மின் நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்
ஏக்கல மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் காணப்படும் அதிக மின்சாரக் கேள்விக்கமைய, தொடர்ச்சியான மின்வழங்கலைப் போன்று, தற்போது நிலவுகின்ற மின்கட்டமைப்பின் தரப்பண்பான நிலைமையை அதிகரிக்கும் நோக்கில், ஏக்கல கைத்தொழில் பேட்டையில் உப மின் நிலையத்தை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏக்கல சென்ட்குறோப் தோட்டத்திற்கு அண்டியதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியில், 02 ஏக்கர் 02 றூட் காணித்துண்டைப் பயன்படுத்தி குறித்த உப மின் நிலையத்தை அமைப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பிரதம மதிப்பீட்டாளரின் விலைமதிப்பீட்டுப் பெறுமதியான 320 மில்லியன் ரூபாவை அறவிட்டு, குறித்த காணித்துண்டை இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. தேசிய சுவடிகள் கூடத்திற்கு ஆவணக்காப்பகங்களின் சர்வதேச பேரவையால் வழங்கப்படும் நன்கொடை
ஆவணக்காப்புத் தொடர்பான மேனிலைத்தரவு (Metadata) மற்றும் டிஜிட்டல் பாதுகாப்புக்கான Atom (Access to memory) மற்றும் Archivematica போன்ற திறந்த மூலாதார மென்பொருள் தொடர்பான நிபுணர்களை இணைத்துக் கொண்டு “இலங்கை தேசிய சுவடிகள் கூடத்தில் Atom (Access to memory) மற்றும் Archivematica போன்ற மென்பொருள் தளத்தை உருவாக்குவதற்காக” 7,000 யூரோக்கள் நன்கொடையை வழங்குவதற்கு ஆவணக் காப்பகங்களின் சர்வதேச பேரவையின் சர்வதேச ஆவணக்காப்பு அபிவிருத்திக்கான நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. தேசிய சுவடிகள்கூடத்தின் நம்பகமான டிஜிட்டல் களஞ்சியத்தை அமைப்பதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கட்டம் – 01 இற்கான செலவின் ஒருபகுதியைப் பொறுப்பேற்பதற்காக குறித்த நன்கொடையைப் பயன்படுத்துவதற்காக ஆவணக்காப்பகங்களின் சர்வதேசப் பேரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்திட்ட சமவாயத்தை ஆவணக்காப்பகங்களின் சர்வதேச பேரவையுடன் கையொப்பமிடுவதற்கும் மற்றும் அதற்குரிய ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருத்துவ வழங்கல்களுக்கான பெறுகை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தப் (டீரல டீயஉம யுபசநநஅநவெ) பொறிமுறையின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2013.11.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள உள்நாட்டு மருந்து உற்பத்திக் கம்பனிகளின் உற்பத்திகளுக்கு 15 ஆண்டுகளுக்கான பின்னரான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்படும் முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும், சுகாதார அமைச்சுடன் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்கிடையில் மருந்துகள் விநியோகிப்பதற்கான பின்னரான ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தவும், 2018.10.02 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, விநியோகிக்கப்படும் மருந்துகளின் விலையைத் தீர்மானிப்பதற்காக விலை நிர்ணயக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்கின்ற முறைக்கமைய தற்போதுள்ள மருத்துவ விநியோகத் தேவையின் 20% சதவீதம் உள்ளடக்கப்படுவதுடன், குறித்த அளவை 40% சதவீதம் வரை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ விநியோகங்கள் 454 இனை விநியோகிப்பதற்கான இயலுமை காணப்படுகின்ற 49 உள்நாட்டு மருந்துகள் உற்பத்தி நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவால் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மருந்துகள் உற்பத்திச் செயன்முறைக்கும் தற்போது பின்னரான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், அடையாளங் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ விநியோகத்தை மேற்கொள்வதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 2024/25 ஆண்டில் சுகாதார அமைச்சின் கீழ் காணப்படுகின்ற மருத்துவமனைகள் / நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவை வழங்கலுக்கான பெறுகை
சுகாதார அமைச்சின் கீழ் காணப்படுகின்ற மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவைகள் வழங்குவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி கோரல் முறைமையைப் பின்பற்றி, வரையறுக்கப்பட்ட றக்னா லங்கா பாதுகாப்புக் கம்பனி, வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.தனியார் கம்பனி மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும், மத்திய மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற மனிதவன அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்த மாகாணங்களில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள் / நிறுவனங்களுக்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.சேவைகள் (தனியார்) கம்பனியால் அனைத்து மருத்துவமனைகளுக்கும், மத்திய மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற பிராந்திய பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தால் குறித்த மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகளுக்கான விலைமுறி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரை மற்றும் கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, குறித்த பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் 2024.10.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாத காலத்திற்கு வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.சேவைகள் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏக்கல ஒலிபரப்புக் கூடம் அமைந்துள்ள காணியை ஒப்படைப்பதால் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தைப் பயன்படுத்தி கூட்டுத்தாபனத்தின் விளைதிறனை அதிகரித்தல்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏக்கல ஒலிபரப்புக் கூடம் அமைந்துள்ள காணியை 1,286 மில்லியன் ரூபாய்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சுயாதீன நிதி ஈட்டல் நிறுவனமாக மீள்கட்டமைப்பதற்காக குறித்த பணத்தொகையைப் பயன்படுத்தப்பட வேண்டுமென 2023.02.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 525 மில்லியன் ரூபாய்கள் தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதில் 205 மில்லியன் ரூபாய்கள் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள சுயமான ஓய்வு முறைக்கான இழப்பீடுகள் வழங்குவதற்கு செலவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 145.72 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நவீனமயமாக்கல் தொடர்பான 25 செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. விசேட அதிரடிப்படையின்கலபலுவாவ நிர்மாணிக்கப்படுகின்ற திருமணமாகியவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லக் கட்டிடத்தொகுதிக் கருத்திட்டத்தின் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்தல்
விசேட அதிரடிப்படையின் கடமைகளில் ஈடுபடுகின்ற உபபொலிஸ் அத்தியட்சகர்களுக்கான 15 திருமணமாகியவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் திருமணமாகியவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் 21 ஆக மொத்தமாக 36 வீட்டு அலகுகளை கலபலுவாவ பிரதேசத்தில் அமைப்பதற்காக 2016.08.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தம் (வரி இல்லாமல்) 289.59 மில்லியன் தொகைக்கு Construction Managers & Planers (Pvt) Ltd இற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் கருத்திட்டக் காலப்பகுதி பல தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அதன் நிர்மாணப் பணிகளில் 95மூ வீதமானவை பூர்த்தியாகியுள்ளன. அதற்கமைய, கருத்திட்டக் காலப்பகுதியை 2024.12.31 வரைக்கும் நீடிப்பதற்கும், மூலப்பொருட்களின் விலை அதிகளவில் அதிகரித்திருத்தல் மற்றும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, கருத்திட்ட செலவை 460.58 மில்லியன் ரூபாய்களாகத் திருத்தம் செய்வதற்காகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தல்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியில் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. திஸன் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்த்தன 2024.10.09 திகதி சேவையின் பின்னர் மேற்குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். அதற்கமைய, அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

09. அரசாங்க பகுப்பாய்வாளர் பதவிக்கு நியமித்தல்
அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றிய திருமதி. தீபிகா செனவிரத்ன 2024.10.11 திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாக உள்ள மேற்குறித்த பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர்களிலிருந்து சேவைமூப்பு அட்டவணைக்கு அமைய அடுத்ததாக ஆகக்கூடிய சேவைமூப்புள்ள, தற்போது அரசாங்க மேலதிக பகுப்பாய்வாளர் பதவியில் சேவையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர் திருமதி. பத்திரஹே சந்யா குமுதினி ராஜபக்சவை நியமிப்பதற்காக நீதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

10. ஹம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
தேர்தல்கள் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை கருத்திலெடுத்து, ஹம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர் பதவியில் தற்போது கடமையாற்றும் திரு. எச்.பி. சுமணசேகர அவர்களை உடனடியாக அமுலாகும் வகையில் நீதி, பொது நிரவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சுக்கு இணைப்பு செய்வதற்கும், குறித்த பதவிக்காக தற்போது தென் மாகாண சபையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கலாசார விவகார, சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள், மகளிர் விவகார மற்றும் மனைப் பொருளாதார, வீடமைப்பு நிர்மாண, வீடமைப்பு மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சின் செயலாளராக சேவையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலர் ஏ.பி.ஐ. த சில்வாவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

11. இலங்கையின் அரச கடன்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் கட்டமைப்பைக் கொள்வனவு செய்தல்
2024 அண்டின் 33 இலக்க கடன் முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும். மேற்குறித்த சட்டத்தின் 23 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய அரச கடன்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட, விபரமான மற்றும் சரியான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவுக் கட்டமைப்பில் பேணப்பட வேண்டும். அரசு ஏற்கனவே வெளிநாட்டு கடன்களை அறிக்கை செய்தல் மற்றும் கடன் முகாமைத்துவத்துக்காக பொதுநலவாய செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள Commonwealth Secretariat Debt Recording and Management System (CS-DRMS) கட்டமைப்பை பாவிப்பதுடன், அது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் நிறுவப்பட்டு பேணப்படுகிறது. குறித்த கட்டமைப்பை இற்றைப்படுத்துதல் மற்றும் வருடாந்த உரிமத்தை நீடித்தல் செயற்பாடுகளை பொதுநலவாய செயலகம் தற்போது நிறுத்தியுள்ளது.

அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தை நிறுவுதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் தொழில்நுட்ப தூதுக்குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதுடன், பொதுநலவாய செயலகத்தினால் வழங்கப்படும் Commonwealth Meridian மென்பொருள் அல்லது ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பினால் வழங்கப்படும் DMFAS மென்பொருளை பாவிப்பது பொருத்தமானது என விதந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கிரயம் சாதகமானதாக இருத்தல், தரவு வெளிப்படுத்தல் இலகுவாக இருத்தல், அவற்றின் தொடர்ச்சியான பேணத்தக்க தன்மை மற்றும் கட்டமைப்புகளுக்கிடையில் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான இயலுமை இருத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் Commonwealth Meridian மென்பொருளை கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவைப் பெறுவதற்கும், குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவையால் நியமிக்கப்படும் பெறுகை குழுவின் விதந்துரை பெறுவதற்கும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

12. 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்
2025.02.04 ஆம் திகதி இடம்பெறவுள்ள 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில், பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்கும், சுதந்திரதின வைபவத்தைப் பெருமையுடன் ஒழுங்குபடுத்துவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்புடைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் வழிநடாத்தல் குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. உணவுக் கொள்கைக் குழு – கூட்ட இலக்கம் 01
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை இயன்றளவு கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைப்பு அணுகுமுறையை பின்பற்றி பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் 2022.10.03 திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்ட உணவுக் கொள்கை குழுவை பின்வரும் அலுவலர்களை உள்ளடக்கி மீள நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
• ஜனாதிபதியின் செயலாளர் – (தலைவர்)
• பிரதமரின் செயலாளர்
• செயலாளர் – நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
• செயலாளர் – வலுசக்தி அமைச்சு
• செயலாளர் – விவசாய, காணி,கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு
• செயலாளர் – நீதி, பொது நிரவாக,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு
• செயலாளர் – வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு
• செயலாளர் – சுகாதார அமைச்சு
• செயலாளர் – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
• செயலாளர் – சுற்றாடல், வனஜீவராசிகள், வனவள மற்றும் நீர் வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

14. ஓய்வூதியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ரூ. 3,000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கும், 2024/2025 பெரும் போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு தலா ரூ. 25000 என்ற வகையில் ஆகக்கூடியது 2 ஹெக்டேயருக்கு உர மானியத்தை அதிகரித்து வழங்குவதற்கும். மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியை தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT