Friday, November 1, 2024
Home » உண்மையான இறை விசுவாசியின் பண்புகள்

உண்மையான இறை விசுவாசியின் பண்புகள்

by Gayan Abeykoon
October 11, 2024 8:00 am 0 comment

 இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம், ‘இறைவனை நேசிப்பது’, ‘இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை நேசிப்பது’, மற்றும் ‘நபி வழியை பின்பற்றுவது’ ஆகிய இறை நம்பிக்கைகள் குறித்த தகவல்களை காண்போம்.

இறைவனையும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நேசிப்பது, நபி வழியைப் பின்பற்றுவது இறை நம்பிக்கையின் முக்கியமான அம்சங்களாகும். நாம் அவ்விருவரையும் நமது உயிரை விடவும், உடைமைகளை விடவும், பெற்றோரை விடவும், குடும்பத்தாரை விடவும், வியாபாரத்தை விடவும், உடன்பிறந்தாரை விடவும், வீட்டை விடவும், செல்வத்தை விடவும் உயர்வாக நேசிக்க வேண்டும். அவர்களின் நேசத்திற்கு நிகராக வேறெந்த நேசமும் இருக்கக்கூடாது. இத்தகைய நேசமே பரிபூரண இறைநம்பிக்கையின் அடையாளமாகும்.

இதனை அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது, ‘உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நஷ்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் இறைவனைவிட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் இறைவன் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள். குற்றம் புரியும் கூட்டத்துக்கு இறைவன் வழிகாட்டமாட்டான், என்று நபியே கூறுவீராக’ (09:24)

இந்த வசனத்தின் படி அல்லாஹ்வையும், அவனது இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் நேசிப்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பது தெளிவாகிறது. அதுவே இறைநம்பிக்கையின் அடிப்படையும் ஆகும்.

இதேவேளை நபி (ஸல்) அவர்கள், ‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். அவை: 1) இறைவனும், அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராக இருப்பது. 2) ஒருவர் மற்றொருவரை இறைவனுக்காகவே நேசிப்பது. 3) நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி).

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரை விடவும் நான் மிக நேசமானவராகும் வரை அவர் உண்மையான இறை நம்பிக்கையாளராக மாட்டார் எனவும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

மேலும் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரழி) அவர்கள் ஒரு தடவை அறிவிப்பதாவது, ‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் உமர் (ரழி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் உமர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் ‘இறைத்தூதரே! எனது உயிரைத் தவிரவுள்ள எல்லாவற்றையும் விட நீங்களே எனக்கு நேசமானவர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உமது உயிரை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவராக ஆகும் வரை நீர் உண்மை இறைவிசுவாசியாக முடியாது’ என்றார்கள். உடனே உமர் (ரழி) நபியை நோக்கி ‘இப்போது இறைவனின் மீதாணை! எனது உயிரை விடவும் தாங்களே எனக்கு மிகவும் நேசமானவர்கள்’ என்றார். ‘இப்போதுதான் உமரே! சரியாகச் சொன்னீர்’ என நபி (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

இறைவன் மற்றும் இறைத்தூதரை நேசிப்பது என்பது, ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையதாகும். ஒருவரை நேசித்து, மற்றவரை நேசிக்காமல் இருக்கமுடியாது. ஒருவரை வெறுத்தாலும் மற்றவரை வெறுக்க வேண்டியது வரும். இருவரின் நேசத்தையும் ஒருசேர அடைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அது என்ன வழி? இறைவனும், இறைத்தூதரும் கட்டளையிட்டதை முடிந்தளவு கடைப்பிடித்து வாழ வேண்டும். அவ்விருவரும் தடுத்ததை முற்றிலும் தவிர்ந்து நடக்கவேண்டும். அவர்களுக்கு எது பிரியமானதோ அது நமக்கும் பிரியமானதாகவும், அவர்களுக்கு எது வெறுப்பானதோ அது நமக்கும் வெறுப்பானதாகவும் இயற்கையாகவே ஆக வேண்டும்.

சொல்லாலும், செயலாலும், இன்பத்திலும்-துன்பத்திலும், இலாபத்திலும்-நஷ்டத்திலும், செழுமையிலும்-வறுமையிலும், ஆரோக்கியத்திலும்-நோயிலும், இளமையிலும்-முதுமையிலும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக அவர்களை பின்பற்ற வேண்டும். மனோ இச்சைக்கு எதிராக எதை தூண்டினார்களோ அதை தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும். பிரியப்படும் இருவரையும் அதிகம் நினைவு கூரவேண்டும். பிரியமான இருவரையும் நினைவு கூரப்படும் போது பணிவு, பயபக்தியுடன் கண்ணியப்படுத்திட வேண்டும்.

இருவரும் யாரை நேசித்தார்களோ அவரையும் நாம் நேசிக்க வேண்டும். வெறுத்தோரை நாம் வெறுக்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில் அவ்விருவரின் எண்ணம் போன்று நமது வாழ்வு அமைந்திட வேண்டும்.

‘ஒன்றை நேசிப்பது அது உன்னை குருடனாகவும், செவிடனாகவும் மாற்றிவிடும்’ என்பது அரேபிய பழமொழியாகும். நாம் இறைவனையும், இறைத்தூதரையும் உண்மையாக நேசிக்கும் போது மற்றையதை காணமாட்டோம். மற்றயதை கேட்க மாட்டோம். இருவரின் ஆழமான நட்பில் நாம் மூழ்கும் போது கண்முன் நடப்பது தெரியாது.

காதுக்கு நேராக பேசுவது கேட்காது. நமது பார்வையும், செவிப்புலனும் நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுக்காகவே மட்டும் செயல்படும். மற்றவர்களுக்காக செயல்படாது. இதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம். இந்தத் தன்மை இறைவனையும், இறைத்தூதரையும் நேசிப்பவர்களிடம் வெளிப்பட வேண்டும்.

இறைவனை நேசிப்பதினால் நன்மையான காரியங்கள்தான் வெளிப்படுமே தவிர தீமைகள் அல்ல. ‘(நல்லவர்கள்) இறைவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்’. ( அல் குர்ஆன் 76:8)

இறைவனை அறியாதோருக்கு, அவனின் நேசத்தை உளப்பூர்வமாக உணராதோருக்குக்தான் சாதாரண இறைக்கட்டளைகளும், இறைக்கடமைகளும் கடினமாகத் தெரியும். இறைநேசத்தை உணர்ந்தோருக்கு மலையளவு கடமை கூட மலைக்க வைக்காது.

‘இறைவனை அறிந்தவன் அவனை நேசிக்கின்றான். இவ்வுலகை அறிந்தவன் அதை வெறுக்கின்றான்’  என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உலகில் வாழும் ஒவ்வொரு இறைவிசுவாசியின் உள்ளமும் மூன்று விதங்களில் இறைவனைப் பற்றி நினைக்கிறது.

1) இறைவனின் அச்சத்தை உணர்வது, 2) இறைவன் தனக்கு சொர்க்கத்தை தரவேண்டும் என இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது, 3) இறைவனை நேசிப்பது.

நபி (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பினால் ஒரு பெண் எப்படி நடந்து கொண்டார்? என்பதை அறியும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு அன்ஸாரிப் பெண்மணியின் தந்தை, அவரின் சகோதரர், அவரின் கணவர் மூவரும் உஹதுப்போரில் நபியவர்களுடன் கலந்து கொண்டனர். அதில் வீரமரணமும் அடைந்தனர். அப்பெண் போர்க்களம் காண வந்தபோது, அந்த மூவரும் கொல்லப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ‘நபி (ஸல்) எப்படி இருக்கிறார்கள்?’ என்றுதான் முதலில் விசாரித்தார். நபியைக் கண்கூடாக கண்ட போதுதான் அவரின் கவலை மாயமாகிப் போனது. இதுதான் உண்மையான அன்பாகும்.

‘ஒருவர் நபியவர்களிடம் வந்து, ‘உலகம் எப்போது அழியும்?’ என கேட்டார். ‘அதற்காக நீர் என்ன ஆயத்தப்படுத்தி வைத்துள்ளீர்?’ என நபி (ஸல்) அவர்கள் அவரிடம் திரும்பக் கேட்டார்கள். ‘நான் அதிகமான தொழுகைகளையோ, நோன்புகளையோ, தானதர்மங்களையோ தயார்படுத்தி வைக்கவில்லை. எனினும் நான் இறைவனையும், இறைத்தூதரையும் நேசிக்கிறேன்’ என்று அவர் பதில் கூறினார். உடனே நபியவர்கள், ‘நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடனேயே இருப்பீர்’ என்றார்கள். (ஆதாரம்: புஹாரி).இறைவனின் நேசத்தை அடைய இறைத்தூதரையும், இறைத்தூதரின் நேசத்தை அடைய நபிவழியையும் பின்பற்றினால் போதும்.

‘(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 3:32) ஆகவே இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்.

அப்துல்லாஹ்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x