Friday, November 1, 2024
Home » பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பு

பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பு

by Gayan Abeykoon
October 11, 2024 8:35 am 0 comment

ுழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போதும், தொழும்போதும் அவரது பேரக்குழந்தைகளான ஹஸனும், ஹுசைனும் அவரது கால்களுக்கிடையேயும், கழுத்தில் ஏறியும் விளையாடக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

இதைப்பார்த்த தோழர்கள், ‘இறைத்தூதரே இந்த அளவுக்கா இருவரையும் நீங்கள் விரும்புகிறீர்கள்?’ எனக்கேட்டார்கள். அதற்கு நபிகளார், ‘ஏன் இல்லை? இவர்கள் இருவரும் என்னுடைய இவ்வுலக செல்வம் இல்லையா?’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள், தனது பேரக்குழந்தைகள் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடுதான் இச்சம்பவம். இதேபோன்று எத்தனையோ உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குழந்தைகளை அன்பொழுக நேசித்தவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாவர்.

குழந்தைகள் இவ்வுலகத்தில் கிடைத்த எல்லா செல்வங்களை விடவும் மேலானவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்தே தனது பேச்சை, செயலை அமைத்துக்கொள்பவர்கள் அவர்கள். குழந்தைகளின் செயல்களுக்கு பொறுப்புதாரியாக பெற்றோர்களே இருக்கிறார்கள். அதனால் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். அவர்களுக்கு எதுமாதிரியான செயல்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற புரிதல், அக்கறை பெற்றோர்களுக்கு இருப்பது அவசியமானது.

குழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது. குழந்தைகள் தந்தையைவிட தாயிடமே அதிக நேரத்தை செலவிடுகின்றன. குழந்தை வளர்ப்பில் தந்தையைவிட தாய்க்கு அதிக கடமைகளும், பொறுப்புகளும் இருக்கின்றன.

தன் குழந்தையை பராமரிப்பதற்காக ஒரு தாய்க்கு கிடைக்கும் கூலி பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்கும் ஒருவருடைய கூலியை போன்றது’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நபிமொழி)

நோன்பு நோற்பதும், இறைவனை தொழுது வணங்குவதும் இஸ்லாமிய கடமைகளாகும். அதற்கு நிகரான நன்மையை தன் குழந்தையை பராமரிப்பதற்கு இஸ்லாம் வழங்குகிறது என்பது, குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பெற்றோர் தம் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும், நிறைய செல்வங்களை ஈட்ட வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைப்பதுபோன்று நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும், நற்சிந்தனை நிறைந்தவர்களாகவும் வளர வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். அதற்கான செயற்காரியங்களிலும் இறங்க வேண்டும்.

இரண்டு கைநிறைய (பொருட்களை தினமும்) தர்மம் செய்வதைவிட ஒரு தந்தை தன் மகனுக்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது’ எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நபிமொழி)

‘தர்மம் தலைகாக்கும்’ என்று சொல்வார்கள். ஆனால் தர்மத்தைவிட கூடுதலான சிறப்பை குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் கற்று கொடுக்கப்படுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ளார்கள். நல்லொழுக்கத்துடன் வளரும் குழந்தைகளால்தான் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பிட முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.

மனிதர்கள் தவறு இழைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகள் தவறு செய்பவர்கள்தான். அதற்காக அவர்களை அடிப்பதும், திட்டுவதும், அதன்மூலம் அவர்களை திருத்திவிடலாம் என்று நினைப்பதும் தவறானதாகும்.

பிள்ளைகளின் வளர்ப்பில் கூடுதல் அக்கறையும், பொறுமையான அறிவுறுத்தலுமே குழந்தைகளுக்கு போதுமானது.

ஒருவரின் தவறை அழகிய முறையில் சுட்டிக்காட்டுவதற்கும், திருத்துவதற்கும் நபி(ஸல்) அவர்கள் பல அணுகுமுறைகளை கடைப்பிடித்திருக்கிறார்கள்.ஒருமுறை பிலால் (ரழி) அவர்கள் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்லும்போது அபுமஸ்தூரா என்பவர் அதை கிண்டல் செய்கிறார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியுள்ளது. அதற்காக நபிகளார் கோபப்பட்டு அவரை அழைத்து கண்டிக்கவில்லை. மாறாக அபுமஸ்தூரை அழைத்த நபிகளார், ‘உனது குரல் அழகாக இருக்குமாமே. எங்கே நான் உனக்கு பாங்கு சொல்ல கற்றுத்தரட்டுமா?’ என்று கேட்டார்கள். அதோடு, அவருக்கு மக்கள் முன்னிலையில் பாங்கு எவ்வாறு சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவரின் நெஞ்சிலும், முன்நெற்றியிலும் தடவினார்கள். ‘இனி நீர்தான் மக்காவாசிகள் முஅத்தின்’ என்று அறிவித்தார்கள். (நபிமொழி)

தனது தவறை உணர்ந்துகொண்ட அபுமஸ்தூரா அன்றுமுதல் அவருடைய 40 வயது வரை மக்காவின் முஅத்தினாக (பாங்கு சொல்பவராக) இருந்தார்கள்.

கிண்டல் செய்தவரிடமே அந்த பொறுப்பை கொடுத்தார்கள். இதுபோன்றதொரு அணுகுமுறையை குழந்தைகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கலாம். பிள்ளைகளை அனைத்து பெற்றோரும் நேசிப்பவர்கள்தாம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களை வளர்ப்பதில் பலர் அக்கறையுடன் செயல்படுவதில்லை.

குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டிட வேண்டும். குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும், நற்சிந்தனையுடையவர்களாகவும், இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளின்படி வளர்க்க முற்படவேண்டும். அதுதான் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான முதற்படியாகும்.

பிந்த் இஸ்மாயீல்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x