ஜப்பான், பிரித்தானியா மற்றும் ஜெர்மனி போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும், டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணியில் திகழுவதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஆஸ்க் கெபிட்டல் நிறுவனம், ‘2028 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதார நாடாக இந்தியா மாறும்’ என்றுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளின் படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 120 கோடி பேர் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களாக உள்ளனர். அவர்களில் 88.1 கோடி பேர் 2023 மார்ச்சாகும் போது இணையப் பாவனையாளர்களாகக் காணப்பட்டனர். அந்த எண்ணிக்கை 2024 மார்ச் இறுதியாகும் போது 95.4 கோடிப் பேராக உயர்ந்துள்ளது, இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாவர். கடந்த ஓராண்டில் மாத்திரம் 7.3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இணையப் பாவனையாளர்களாகப் புதிதாக இணைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் டிஜிட்டல் முன்முயற்சிகளின் பயனாக இணையம், 4ஜி, 5ஜி சேவைகளின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக அடுத்துவரும் நான்காண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டொலர்களாக உயர்வடையும்.
இந்தியா முன்னெடுக்கும் டிஜிட்டல் மயமாக்கலுடன், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் பயனாக பணமில்லா பரிவர்த்தனைகளும் இணைய வழி மூலமான கொள்வனவுகளும் ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறை, டிஜிட்டல் பொழுதுபோக்கு வசதிகள், இணையவழிக் கல்வி, டெலி மருத்துவம், டிஜிட்டல் சுகாதாரம், பேரிடர் பதிலளிப்பு போன்ற உயிர்காக்கும் சேவைகளுக்கு கையடக்க தொலைபேசிகளும் இணைய சேவைகளும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய பங்களிப்பாக அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.