தமிழ்நாடு சென்னையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றவர்களில் சனநெரிசலில் அகப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய விமானப்படையின் 92 ஆ-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைப் பார்வையிட இலட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.
இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தபோது, கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால், அந்தப் பகுதியில் வீதிகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் வீதிக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கியும், வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் சுமார் 200 பேர் வரை மயக்கமடைந்தனர். 90 இற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.
விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்பநிலையும் அதிகமாக இருந்தது. அதன் காரணமாகவே மரணங்கள் சம்பதித்துள்ளன.
மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலை 11 மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்காக, காலை எட்டரை மணியில் இருந்தே பொதுமக்கள் கடற்கரையில் கூட ஆரம்பித்தனர்.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கவே மிகப் பெரிய வரிசை நின்றது. காலை பத்து மணியளவில் பல இலட்சம் பேர் கடற்கரையில் குவிந்தனர். இருந்தபோதும் இவர்களுக்கென போதுமான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்துதரப்படவில்லையென நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பிற்பகல் ஒரு மணியளவில் சாகசம் நிறைவடைந்த போது கடற்கரையில் கூடியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதுவே இம்மரணங்களுக்குக் காரணமாகும்.