– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 10 முடிவுகள்
இலங்கை ஆட்பதிவு மற்றும் கலால் திணைக்களங்களுக்கு பதில் ஆணையாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 10 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
2024-09-24 திகதியிலிருந்து ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளது. அதற்கமைய தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அலுவலரான எம்.எஸ்.பீ. சூரியப்பெருமவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் கடமைகளை மேற்கொள்வதற்காக நியமிப்பதற்கான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
2. இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கான நியமனம்
இலங்கை மதுவரித் திணைக்களம் அரசின் பிரதான வருமான சேகரிப்பு நிறுவனமாகும். மேற்குறித்த நிறுவனத்தின் வினைத்திறன் மற்றும் நல்லாளுகை அரச வருமானத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. மேற்குறித்த திணைக்களத்தின் வருமான இலக்கை அடையும் செயற்பாடுகளை மாற்றமின்றி பேணிச்சென்று எதிர்கால சவால்கள் மற்றும் குறிக்கோளை அடையும் வகையிலான தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, தற்போது மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் ஜே.எம். குணசிறி சேவையை உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கும், ஜனாதிபதி செயலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக (நிறுவன ஒருங்கிணைப்பு II)) சேவையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேடதர அலுவலர் திரு. யு.டி.என். ஜயவீரவை உடனடியாக அமுலாகும் வகையில் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவி கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிப்பதற்கும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
3. காலநிலை மாற்றங்களால் அதிகரிக்கும் விளைவுகள் மூலம் இடர்களுக்கு ஆளாகக்கூடிய இலங்கை மற்றும் இந்திய சமூகங்களின் தாங்குதிறனை பலப்படுத்துவதற்கான பிராந்திய கருத்திட்டம்
சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து காலநிலை மாற்றங்களின் அதிகரிக்கின்ற விளைவுகள் மூலம் இடர்களுக்கு ஆளாகக்கூடிய இலங்கை மற்றும் இந்திய சமூகங்களின் தாங்குதிறனை பலப்படுத்துவதற்கான கருத்திட்டத்திற்கான முன்மொழிவு இசைவாக்கமடைதல் நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 05 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதுடன், கருத்திட்டத்திற்கு 13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மொனறாகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையில் கையொப்பமிடுவதற்கு சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. மார்ச்சன்ட் பாங்க் ஒஃப் ஸ்ரீலங்கா அன்ட் பினான்ஸ் பீஎல்சீ (MBSL) கம்பனிக்கான அடிப்படை வங்கித் தீர்வுகள் (Core Banking Solution) வழங்கல், தாபித்தல், ஒப்படைத்தல் மற்றும் பேணிச் செல்வதற்கான பெறுகையை வழங்கல்
மார்ச்சன்ட் பாங்க் ஒஃப் ஸ்ரீலங்கா அன்ட் பினான்ஸ் பீஎல்சீ (MBSL) கம்பனிக்கான அடிப்படை வங்கித் தீர்வுகள் (Core Banking Solution) வழங்கல், தாபித்தல், ஒப்படைத்தல் மற்றும் பேணிச் செல்வதற்கான பெறுகைக்கான தேசிய போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 04 நிறுவனங்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளன.
விலைமுறிதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப ரீதியான முன்மொழிவுகள் மற்றும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக்குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் குறித்த பெறுகையை Scienter Technologies (PTE) Ltd இற்கு வழங்குவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த பெறுகையை வழங்குவதற்காக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. இத்தாலியின் மிலானோவில் 2024.10.09 தொடக்கம் 11 ஆம் திகதி வரை இடம்பெறும் TTG – 2024 சுற்றுலாக் கண்காட்சி வளாகத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்காட்சிக் கூடத்தை அமைத்தல்
2024.10.09 தொடக்கம் 11 ஆம் திகதி வரை இத்தாலியின் மிலானோவில் இடம்பெறும் TTG – 2024 சுற்றுலாக் கண்காட்சியில் சுற்றுலாத்துறையில் பங்கெடுக்கும் சுற்றுலாத்துறை முகவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்னள் 25 பேர் பங்குபற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அவர்களுக்கான வசதிகளை வழங்குவதற்காக கண்காட்சி வளாகத்தில் 100 சதுரமீற்றர் அளவை ஒதுக்கிக் கொள்வதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பணியகத்தால் கண்காட்சி கூடத்தை அமைப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறி முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டிருப்பினும், எந்தவொரு விலைமுறியும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதற்கமைய, நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு, வைபவத்தின் ஏற்பாட்டுக் குழுவின் உத்தியோகபூர்வ கம்பனியான Prostand S.r.l இற்கு குறித்த சேவைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையைக் குறிப்பிட்டு நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள விடயங்களுக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
6. ஜப்பான் கடன் வசதியின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ள இலங்கையின் நிலப்ரப்புசார் தொலைக்காட்சி மின்னணு ஒளிபரப்பு திட்டம் (Digital Terrestrial television Broadcasting)
உலக போக்குக்கு ஏற்புடையதாக இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தற்போதுள்ள அனலொக் (Anolog) தொழில்நுட்பத்துக்குப் மாற்றீடாக மின்னணு (Digital) தொழில்நுட்பத்துடனான ஒளிபரப்புகளாக மாற்றம் செய்வதற்காக 2009 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணிகளால் மேற்குறித்த செயற்பாடுகளன் அமுலாக்கம் தாமதமடைந்துள்ளது. ஜப்பானிய ISDB – T தொழில்நுட்பத்தில் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புகளை எண்மியப்படுத்தும் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2022-07-27 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திட்டத்துக்குத் தேவையான நிதியை பெறுவதற்காக ஏற்கனவே ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஒத்திசைவு வழங்கியுள்ளது என்பதனால் திட்டத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை கிடைத்துள்ளது.
அதற்கமைய இலங்கைப் பிரஜைகளுக்கு மேலும் நன்மைகள் கிடைக்கும் வகையில் நிலப்பரப்புசார் தொலைக்காட்சி எண்மியப்படுத்தல் திட்ட அமுலாக்கலை உறுதி செய்வதற்காக தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்களை ஆய்வுசெய்து அவதானிப்பு மற்றும் விதந்துரைகளுடனான அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சு செயலாளரின் தலைமையிலும், பிற தொடர்புடைய நிறுவன பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விசேட குழுவை நியமிப்பதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார, தேசிய ஒருமைப்பாட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
7. அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை இரத்துச் செய்தல்
அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் “வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்”,“பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்” மற்றும் “விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்” ஆகியவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்கள்/ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால், அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள்/ ஆலோசகர்களின் சேவையை 2024-09-30 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அமைச்சரவையை தெளிவுபடுத்திய பின்னர், அமைச்சரவை அதற்கான ஒப்புதலை வழங்கியது.
08. சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் சேவையை நீடித்தல்
2023-09-14 திகதியிலிருந்து சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவிக்கு எயாவைஸ் மார்~ல் திரு. ஆர்.எஸ். பியன்வில அவர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த நியமன காலப்பகுதி 2024-09-13 திகதியில் முடிவடைந்துள்ளது. எனவே,மேற்குறித்த நபரை 2024-12-31 திகதி வரை சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
09. இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிகளைப் பெற்றுக் கொள்கின்ற ஒப்பந்தம்
இலங்கை அரசுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைத் தொடரின் பின்னர் வெளிப்படையானதும் ஊகிக்கக் கூடிய சுங்க நடவடிக்கையின் மூலம் சட்ட ரீதியான வர்த்தக நடவடிக்கைகளுக்காக வசதிகளை வழங்குவதற்காக இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு 2021.11.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடப்படவில்லை.
இருநாடுகளுக்கிடையில் காணப்படும் வர்த்தகத் தொடர்புகள் மூலம் உரித்தாகின்ற நன்மைகள் மற்றும் இருதரப்பு சுங்க ஒத்துழைப்புக்களில் மேலெழுந்து வரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர்
2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
• ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன்,
• குறித்த தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது.
• இலங்கையில் மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.