இந்தியாவின் பாதுகாப்பு கைத்தொழில் துறை உற்பத்திகள் உலகில் 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
2023-2024 இல் பாதுகாப்பு கைத்தொழில் துறை ஏற்றுமதிகள் மூலமான வருமானம் 21 ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதெனத் தெரிவித்த அவர், இதனை அடுத்துவரும் ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாவாக உயர்த்த இலக்காகக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் பத்தாண்டு விழாவையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக பாதுகாப்பு கைத்தொழில் துறை உட்பட ஒவ்வொரு துறையிலும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக இந்தியாவின் பாதுகாப்பு கைத்தொழில் துறை இன்று பெரிதும் வளர்ச்சி கண்டு வருகின்றது. அதனை ஊக்குவிக்கவென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் பாதுகாப்பு கைத்தொழில் துறை உற்பத்திகள் 1.27 இலட்சம் கோடி ரூபாவை எட்டியுள்ளது. எனினும் உலகில் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக எமது நாடு விளங்குகிறது. அதன் விளைவாக 2029 ஆகும் போது இந்திய ஆயுதப்படைகளுக்கான மூலதன செலவு 130 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணத்தினால் இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களில் தங்கியிருப்பதைக் குறைக்கும் வகையில், உள்நாட்டுப் பாதுகாப்பு கைத்தொழில் துறை உற்பத்திகளை ஊக்குவிக்கவென அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.