Sunday, November 24, 2024
Home » சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் நாட்டிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் நாட்டிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி

by Prashahini
October 7, 2024 1:44 pm 0 comment

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நிதி அமைச்சர் ​கே.எம். மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இந்த நிதி வசதியானது, இலங்கையின் முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை காண்பிக்கிறது.

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இந்த இரு வருட வேலைத்திட்டம் (2023-2024), வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடி மக்கள் மீதான தாக்கத்தை குறைத்து முழுமையான பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி இந்த வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று அம்சங்களாக,

1.பொருளாதார நிருவாகத்தை மேம்படுத்தல் : நிதி நிலைத்தன்மையை பாதுகாத்து அரச வளங்கள் முகாமைத்துவம், நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலப்படுத்தல்

2. வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தல் : மிகவும் போட்டித்தன்மை மிக்க தனியார் துறையுடன் இலங்கையின் அபிவிருத்தியை விரிவுபடுத்தல்

3.வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல்: நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல்.

உரிய நிதி வசதியை பெற்றுக்கொள்ள தகுதி பெற வேண்டுமெனில், அரசாங்கத்தினால் மேற்குறிபிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் 9 வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட வேண்டிய அதேநேரம், அதற்கு உகந்த பொருளாதார கொள்கை வரைவொன்றை பேணிச் செல்ல வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி இந்த நிதி வசதியின் இரண்டாம் கட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும், உலக வங்கிச் சபையின் அனுமதி கிட்டியுள்ளதோடு, ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதன் பின்னர் அது அமுலாகும்.

உலக வங்கியின் இந்த நிதி உதவி இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தீர்மானமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் என்பதோடு, நிலையானதும் போட்டித்தன்மை மிக்கதுமான சூழலை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT