பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்.07ஆம் திகித நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டெல் அவிவ் முதல் லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் நகரங்களில் ஹமாஸ் தாக்குதலின் முதலாமாண்டு நினைவைக் குறிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலங்கள், நினைவேந்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன. நோவா இசை விழாவில் கடந்த ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலை குறிக்கும் விதமாக டெல் அவிவ் நகரத்தில் மக்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தியும், பிரார்த்தனை செய்தும் கூடியிருந்தனர்.
அப்போது இசைநிகழ்ச்சி நடத்தியும் அஞ்சலி செலுத்தினர். அந்த அரங்கின் வாயிலில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் பெரிய திரையில் காட்டப்பட்டன. இதனிடையே தற்காலிக நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தியும், கடந்த வாரத்தில் ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஓராண்டு நிறைவு வந்துள்ளது.
இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிகழ்வுகள் ஒரு மீள்பார்வை:
- ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல்: கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பாராத வகையில் ராக்கெட் மற்றும் தரைவழி என பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது.
- ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன: காசாவில் இருந்து இஸ்ரேல் பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி 2000 இற்கும் அதிகமான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இது பெரிய அளவிலான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
- ஹமாஸ் ஊடுருவல்: இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா நகரங்கள் மற்றும் கிப்புட்ஸிமில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
- பெரிய அளவிலான உயிரிழப்புகள்: இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் செல்லப்பட்டனர். இன்னும் 97 பேர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 பேர் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
- போரை அறிவித்த இஸ்ரேஸ்: ஹமாஸ்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் இயக்கத்தினர் மீது போர் அறிவித்தார்.
- காசா மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேஸ் தனது பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ்களின் உள்கட்டமைப்பு, ஆயுத கிடங்குகள், தலைமையகங்களை குறிவைத்து பரந்த அளவிலான வான் வழி தாக்குதல் நடத்தியது.
- காசாவில் அதிகபட்சம் பேர் உயிரிழப்பு: இஸ்ரேலின் பதிலடி தொடங்கியதி்ல் இருந்து இதுவரை காசாவில் குறைந்தது 41,870 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என பாலஸ்தீனத்தில் உள்ள காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உலகநாடுகளின் எதிர்வினை: இந்த இருதரப்பு தாக்குதல்களை உலதநாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர். போரினை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போரினால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
- எல்லைப்புற மோதல்: இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ்களுடன் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் – ஹமாஸ் எல்லையில் மோதல் தொடந்து வருகிறது.
- பரந்த மோதலின் தொடக்கம்: ஒக்.07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ்கள் நடத்திய தாக்குதல் மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுத்தது. மேலும் நீண்டகால இராணுவ தாக்குதலுக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கும் காரணமாகியுள்ளது.