Sunday, November 24, 2024
Home » கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்

கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்

- தாம் கட்சியில் இருந்து விலகியதாக கூறும் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களே

by Prashahini
October 6, 2024 9:39 pm 0 comment

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (06) மன்னார், மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிண்ணியாவைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் இவ்வாறு பலர் உங்களது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் மற்றும் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தலைவர் ரிஷாட் தெரிவித்ததாவது,

“தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் கூறித்திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது.

இதுபோலவே, கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர்தான், வௌியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேரமாட்டோம்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை. இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT