காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு மேலும் 20 பேர் கொல்லப்பட்டு 108 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
வடக்கு காசாவின் பெயித் லஹியா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
மறுபுறம் நேற்று முன்தினம் இரவு காசா நகரில் இடம்பெற்ற வான் தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். நகர சபை பூங்காவில் கூடி இருந்தவர்கள் மீதே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஓர் ஆண்டை நெருக்கும் இஸ்ரேலின் காசா மீதான இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,615 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 96,359 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.