– 184 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மீட்பு
சுமார் ரூ. 55 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த பெண் பயணி ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.
ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய வர்த்தகரான பெண்ணான இவர் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பொருட்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் இன்று (30) அதிகாலை 12.00 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-648) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து பயணப் பெட்டிகளை சோதனை செய்த போது, 36,800 “பிளாட்டினம்” ரக சிகரெட்டுகள் அடங்கிய 184 சிகரெட் அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.