பாணந்துறை பள்ளியமுல்ல பகுதியில் இன்று (30) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் மொரட்டுவை பிரிஸ் மாவத்தையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பள்ளியமுல்ல தொட்டுபல வீதியில் பொல்கொட நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நான்கு சட்டவிரோத மாடுகளுடன் லொறியொன்று பயணிப்பதாக பூகொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, லொறியை பொலிஸார் பின்தொடர்ந்து சென்றுள்ள பொலிஸார், பொல்கொட நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த காணியில் வைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த லொறியில் 5 பேர் பயணித்ததாகவும், அவர்களில் இருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றதாகவும், இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய லொறியில் நான்கு மாடுகள் இருந்துள்ளன.
படுகாயமடைந்த நபருக்கு தோள்பட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.